Monday, May 28, 2012

புலிகளின் தலைவர் ஒரு தீவிரவாதி - முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா!

Monday, ,May, 28, 2012
இலங்கை::தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்றார் அவர்.

தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை. இரு இனங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும் என்று யாருக்கேனும் அக்கறை இருக்குமானால், முதலில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது, வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது போன்றவற்றின் மூலம்தான் இந்த நம்பிக்கையை உருவாக்க முடியும். எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். பத்து இருபது ஆண்டுகள்கூட ஆகலாம். நாம் காந்திருந்துதான் ஆக வேண்டும். இப்போதிருக்கும் அவநம்பிக்கையேகூட கடந்த 30 ஆண்டு கால சண்டைகளின் விளைவுதானே என்றார் பொன்சேகா.

தமிழர்களின் பகுதிகளில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கைது செய்யப்படுவது ஆகியவை குறித்துக் கேட்டபோது, ராணுவம் அங்கு இருக்க வேண்டும். ராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்க் கட்சிகள் கோரக்கூடாது. 200 தீவிரவாதிகள் சேர்ந்தால் குண்டு வெடிப்புகள் மூலம் இப்போதிருக்கும் நிலையை தலைகீழாக மாற்றிவிட முடியும்'' என்றார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பொன்சேகா கடுமையாக விமர்சித்தார்.

மறுவாழ்வு என்பது புலிகள் இயக்கதைச் சேர்ந்த ஒருவருக்கு தச்சு வேலை சொல்லிக் கொடுப்பதோ, அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு ராணுவ வீரரை ஊக்கப்படுத்துவதோ கிடையாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரின் மனதை மாற்ற வேண்டும். தீவிரவாத மனநிலையுடன் இருக்கும் ஆயுதம் இல்லாத ஒருவர், ஆயுதமேந்திய தீவிரவாதியை விட ஆபத்தானவர்'' என்றார் பொன்சேகா.

ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ""சர்வாதிகார நாடுகளுடன் நட்பு கொண்டு, ஜனநாயக நாடுகளைப் பகைத்துக் கொண்ட ராஜபட்ச அரசின் தவறான கொள்கையில்தான் தவறு இருக்கிறது'' என்றார்.

ஜனநாயக நாடுகளிடம் இருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நிலைக்காக பிற நாடுகளைக் குறை கூறக்கூடாது. அதே நேரத்தில் போர்க்குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன என்பனவற்றை நான் மறுக்கிறேன்.

போரின்போது 4 வீரர்கள், 8 வீரர்கள் எனப் பிரிக்கப்பட்ட குழுக்கள் ஒவ்வொன்றையும் நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத பாதுகாப்பு வலயங்களை நாங்கள் உருவாக்கித் தந்தோம்.

புலிகளைக் கண்காணிப்பதற்காக ஆளற்ற விமானங்களைப் பயன்படுத்தினோம். ஒருபோதும் நாங்கள் தீவிரவாதிகளைப் போல நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் 2,70,000 தமிழர்கள் எங்கள் பகுதிக்கு வந்தார்கள்'' என்றார் பொன்சேகா.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன், நடேசன் போன்ற புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, மே 17-ம் தேதி இரவுக்குப் பிறகு யாரும் சரணடைய முன்வரவில்லை. யாராவது சரணடைந்திருந்தால், அதை எங்களது வீரர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்'' என்றார்.

அதே நேரத்தில், மே 17-ம் தேதி இரவு 9 மணிவரை தான் இலங்கையில் இல்லை என்பதால், அந்த நேரத்தில் யாராவது சரணடைய முன்வந்திருந்தால் அதுபற்றித் தனக்குத் தெரியாது என்றும் பொன்சேகா கூறினார்.

புலிகளின் தலைவர் பிரபாகாரனை ஒரு மேதை என்று கருதுகிறீர்களா என்ற கேட்டபோது, அவர் ஒரு தீவிரவாதி என்றார்.

No comments:

Post a Comment