Tuesday, May 1, 2012

மதுரையில் இன்று காலை பயங்கரம் : கோயில் வளாகத்தில் சைக்கிள் குண்டு வெடிப்பு!

Tuesday, May, 01, 2012
மதுரை::மதுரையில் ஸ்ரீராம் கோயில் வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் சைக்கிள் குண்டு வெடித்தது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாரதிய ஜனதா மாநாட்டை சீர்குலைக்க மர்ம நபர்கள் திட்டம் தீட்டினரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கிழக்கு அண்ணாநகர் முதல் தெருவில் ஸ்ரீராம் கோயில் உள்ளது. இந்த கோயிலை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர். கோயிலின் வெளிப்புறத்தில் கடந்த 4 நாட்களாக ஒரு சைக்கிள் சங்கிலியால் கட்டப்பட்டு நின்றது. இந்த சைக்கிளின் பாக்சில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. கோயிலுக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் வாட்ச்மேனாக பணியாற்றும் செல்லக்கண்ணு (39) சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். விடிந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து தூங்கிவிட்டார். காலையில் சென்று பார்த்தபோது, வெடித்த இடத்தில் 50 மீ. சுற்றளவுக்கு 4 பேட்டரிகள், வயர், திரிகள், சணல் பொருட்கள் சிதறி கிடந்தன. சைக்கிளில் இருந்த பாக்ஸும் சிதறிக் கிடந்தது. இது பற்றி வீட்டில் இருந்த கோயில் வாட்ச்மேன் பாக்கியராஜிடம், செல்லக்கண்ணு தகவல் தெரிவித்தார்.

இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தடய அறிவியல் பிரிவு உதவி இயக்குனர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் பார்வையிட்டு சிதறி கிடந்த பொருட்களை சேகரித்தனர். 9 வோல்ட் கொண்ட 4 பேட்டரிகள், 1.5 வோல்ட் கொண்ட 4 சிறிய பேட்டரிகளோடு இரண்டு டைம்பாம் வெடித்து சிதறியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பாஜ மாநாட்டை சீர்குலைக்க சதி?

மதுரையில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் பாஜ மாநில மாநாடு நடைபெற இருந்தது. மாநாட்டில் அத்வானி உள்பட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருந்தனர். மழை காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. பாஜ மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் இந்த சைக்கிள் டைம்பாம் தயாரிக்கப்பட்டிருக்கலாம். மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் ஸ்ரீராம் கோயிலில் சைக்கிள் டைம்பாமை சமூக விரோதிகள் வைத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வரும் 10, 11 ஆகிய தேதிகளில் பாஜ மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த முறை அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment