Wednesday, May 2, 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிணை மனுவை பரிசீலனை செய்ய நீதியரசர்கள் குழு!

Wednesday,May,02,2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிணை மனுவை பரிசீலனை செய்வதற்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தை நியமிக்கவுள்ளதாக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று குறிப்பிட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவின் பிணை மனு மற்றும் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு ஆகியன இன்றையதினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீட்டினை விசாரிப்பதற்காக இதற்கு முன்னர் பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டது.

ஆயினும் இன்றைய தினம் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் மாத்திரம் பிரசன்னமாகியிருந்தனர்.

தற்போது ஏனைய நீதியரசர்கள் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக இதன்போது பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் பிணை விண்ணப்பம் உயர் நீதிமன்றத்தில் அல்லாது மேல் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என இதன்போது சொலிசிஸ்டர் ஜென்ரல் பாலித்த பெர்னாண்டே தெரிவித்தார்.

பிணை மனுவை சமர்ப்பிப்பதற்கு தமது கனிஷ்ட சட்டத்தரணிகள் மேல் நிதிமன்றத்தின் பதிவாளரை சந்தித்ததாக சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது பதிவாளர் அதனை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அதுதொடர்பில் மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டதாக லத்துவஹெட்டி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment