Saturday, April 28, 2012

சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி : ஓட்டல், லாட்ஜ்களில் அதிரடி சோதனை உளவுத்துறையினரும் தீவிர கண்காணிப்பு!

Saturday, April, 28, 2012
சென்னை::கீழ்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓட்டல், லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு போலீசார் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு குண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, 2 வாலிபர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி சத்தியா (32) என்பவர் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது தெரியவந்தது. அவருடன் இருந்த நண்பர் தூத்துக்குடியை சேர்ந்த சுகந்தனுக்கும் (27) காயம் ஏற்பட்டது. இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எதிரிகள் தாக்கினால் பதிலடி கொடுக்கவே குண்டு தயாரித்ததாகவும் போலீசாரிடம் சத்தியா கூறியுள்ளார்.வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குண்டு வெடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர கமிஷனர் திரிபாதி உத்தரவின்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீசார் நகரில் உள்ள ஓட்டல், லாட்ஜ் மற்றும் மேன்ஷன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த தகவல்களையும் விசாரித்து வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து உளவுப் பிரிவு போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு யார் மீதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களை பற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்விரோதம் காரணமாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் சிலர், சென்னையில் தங்கி சதித் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களை சேர்ந்த கொலை குற்றவாளிகளும் சென்னையில் பதுங்கி விடுகின்றனர். மக்கள் நடமாட்டம், வெளிமாநில நபர்களின் வருகையால் சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. சிலர் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment