Friday, March 30, 2012

சுஷ்மா சிவராஜ் இலங்கை விஜயம்!

Friday, March,30, 2012
சென்னை::இந்தியாவின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சிவராஜ் தலைமையிலான சர்வகட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என த ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இந்தப் பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் பிரதிநிதிகளின் விஜயம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவகாரம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது..

அவர்கள் தற்போது இலங்கையில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலை குறித்து ஆராய்வர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வட மாகாணத்தில் யுத்த பாதிப்புக்கு உள்ளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு செல்வதுடன், வவுனியா நலன்புரி முகாம்களையும் நேரில் சென்று பார்வையிடுவர் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக இந்திய நாடாளுமன்ற குழுவின் விஜயம் குறித்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்த போதும், நேற்றைய தினமே இதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்த குழு இலங்கை வருகிறது.

இந்த குழுவில் இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சா உறுப்பினர் ப்ரலாட் ஜோசி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் எம்.வெங்கட் நாயுடு ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் குறித்து இதுவரையில் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment