Thursday, February 2, 2012

சீனா, ரஷ்யா எதிர்ப்பினால் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திணறல்!

Thursday, February 02, 2012
நியூயார்க்::ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை பதவி விலகக்கோரும், ஐரோப்பிய நாடுகள்-அரபு லீக் கூட்டணி தீர்மானத்தை, சீனாவும், ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்ததால், கவுன்சில் கூட்டம் எவ்வித முடிவும் எடுக்காமல் முடிந்தது.

சிரியா ராணுவத்தின் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

5,400 பேர் பலி...: சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், ராணுவத்தால் நசுக்கப்பட்டு வருகிறது. கடந்த 11 மாத போராட்ட காலத்தில், ஐயாயிரத்து 400 பேர் பலியாகியுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

புதிய தீர்மானம்: இந்நிலையில், சிரியா விவகாரம் மீது, ஐரோப்பிய நாடுகள்-அரபு லீக் கூட்டணி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை, நேற்று முன்தினம் கொண்டு வந்தன. இக்கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் கலந்து கொண்டார். இத்தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துப் பேசின. தீர்மானத்தின் அவசியம் குறித்துப் பேசிய, கத்தார் பிரதமர் ஷேக் ஹமாத் பின் ஜசிம் அல் தானி, "சிரியா விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. சிரியாவும், இதுவரை கொடுத்த வாக்குறுதிப்படி நடக்கவில்லை. அதனால், இதில் உடனடியாக, நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்றார்.

சீனா, ரஷ்யா எதிர்ப்பு: ஆனால் சீனாவும், ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்தன. மக்கள் மீதான ராணுவ வன்முறைகளை இரு நாடுகளும் கண்டித்த போதிலும், அதிபர் அசாத்தை பதவி விலகச் சொல்ல முடியாது என, தீர்மானமாகச் சொல்லி விட்டன. மேலும், இத்தீர்மானம், சிரியாவில் அன்னியத் தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும், அவை கூறியுள்ளன. இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று பேட்டியளித்த, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், "அதிபர் அசாத்தை பதவி விலகும்படி, ரஷ்யா சொல்லாது. பிற நாடுகளின் ஆட்சிகளை மாற்றுவது நமது வேலையல்ல. இதை, சிரியா நாட்டவர் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

ஹிலாரி சமாதானம்: சீனாவும், ரஷ்யாவும் பயப்படுவது போல, சிரியா மற்றொரு லிபியா ஆக வாய்ப்பில்லை என, சுட்டிக் காட்டிய ஹிலாரி கிளின்டன், அரபு லீகின் ஒப்பந்தம், சிரியா விவகாரத்திற்கு நல்லதொரு தீர்வாக அமையும் என தெரிவித்தார். இவ்விவாதம் மீண்டும் தொடர்ந்து நடக்க வேண்டும் எனவும், அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் நிலை என்ன? கவுன்சிலில் விவாதத்தின் போது பேசிய இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, மக்கள் மீதான ராணுவ வன்முறைகளை, இந்தியா கண்டிப்பதாகத் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது: அரபு லீகின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு, அரசியல் ரீதியிலான தீர்வை, சிரியா நாட்டவரே முன்னெடுக்க வேண்டும். அதுவும் தாமதமின்றி நடக்க வேண்டும். அந்த நடவடிக்கை, சிரியாவின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக, காப்பதாக இருக்க வேண்டும். சிரியா விவகாரம், பாதுகாப்பு பிரச்னை மட்டுமல்ல, அரசியல், பொரு ளாதார பிரச்னைகளும் சேர்ந்ததுதான். வன்முறை இல்லாத சூழலில், சிரியா நாட்டவர் தலைமையில், அவர்களே முன்வைக்கும் அரசியல் தீர்வு மூலம், சிரிய நாட்டவரின் விருப்பங்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும். இவ்வாறு புரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment