Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்து மெசேஜ் காசு பறிக்கும் செல்போன் நிறுவனங்கள்!

Sunday, January, 01,2012
சென்னை::செல்போனில் புத்தாண்டு வாழ்த்து மெசேஜ் அனுப்பினால் முன்னறிவிப்பு இன்றி செல்போன் நிறுவனங்கள் காசு பறிப்பதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என விசேஷங்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் வாழ்த்து அனுப்புவது அதிகரித்து வருகிறது. இதனால், விசேஷ நாட்களில் எஸ்எம்எஸ் அனுப்பினால், கூடுதல் கட்டணங்களை செல்போன் நிறுவனங்கள கடந்த சில ஆண்டுகளாக வசூலித்து வருகின்றன. இத்தனைக்கும் வாடிக்கையாளர்களை கவர அறிமுகமான எஸ்எம்எஸ் பூஸ¢டர் பயன்படுத்தியவர்களுக்கும் இதே பிரச்னை தான். பண்டிகை நாட்களுக்கு மட்டுமின்றி அதற்கு முதல் நாள் எஸ்எம்எஸ் அனுப்பினாலும், இப்போது செல்போன் நிறுவனங்கள் காசை பறித்து விடுகின்றன.

அதுவும் இந்த புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது டிச.30, 31 ஆகிய தேதிகளில் இப்படி அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு நிறுவனங்களுக்கு ஏற்ப 1 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ. 2 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று புத்தாண்டு என்பதால் இன்றும் அதே கட்டணம் தொடரும். முன்பெல்லாம் இப்படி பூஸ்டர் சலுகை ரத்து செய்வது குறித்து, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கும். இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யவில்லை. ஆண்டுக்கு 5 நாட்களுக்கு இப்படி பூஸ்டர் சலுகையை ரத்து செய்துக் கொள்ள செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இப்படி விசேஷ நாட்களில் சலுகை ரத்து செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment