Sunday, January 1, 2012

காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்-அரசாங்கம் அறிவித்துள்ளது!

Sunday, January, 01,2012
இலங்கை::காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைவாக வரையறுக்கப்பட்ட காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காணி அதிகாரங்கள் மட்டுமன்றி ஏனைய சில விடயங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17,18 மற்றும் 19ம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை தற்போது சமர்ப்பிக்காத போதிலும், அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, காணி அதிகாரங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விட்ட இடத்திலிருந்து தொடரப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சில முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணிப் பயன்பாடு, வரி அறவீடு, காவல்துறை அதிகாரம், மாகாண காவல்துறை ஆணைக்குழுவிற்கான அதிகாரம் போன்ற விடயங்களில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையில் எவ்வாறு அதிகாரம் பகிரப்படும் என்பதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது கால நேரத்தை விரயமாக்கும் செயற்பாடு என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்கள் பற்றி வலியுறுத்தப்படுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக ஜனாதிபதியும் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

No comments:

Post a Comment