Monday, January 30, 2012

நடுக்கடலில் சாகசம் இந்திய : ஜப்பான் கடலோர காவல்படை கூட்டுப் பயிற்சி

Monday, January 30, 2012
சென்னை::இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2006ம் ஆண்டு கையெழுத்தானது. அதன் பின், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருநாட்டு கடலோர காவல் படையினரும் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய படையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பான் கடலோர காவல் படையின் சட்சூ என்ற ரோந்து கப்பல் கடந்த 26ம் தேதி சென்னை துறைமுகம் வந்தது. இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையினர் இணைந்து 'ஷயோக் - கைஜின்' என்ற பெயரில் 11 வது கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் நேற்று சென்றனர்.

இந்திய கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் அட்மிரல் எம்.பி.முரளிதரன் தலைமையில் விஸ்வாஸ்ட், புதிதாக பணியில் சேர்ந்த ராணி அபாக்கா உள்ளிட்ட 6 ரோந்து கப்பல்கள், 2 அதிவிரைவு படகுகள், நீரிலும்-நிலத்திலும் செல்லக்கூடிய 2 ரோந்து கப்பல்கள், 3 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் மற்றும் ஜப்பான் கடலோர காவல் படை கமாண்டன்ட் ஹிஸாயா- சூ-சூசுகி தலைமையில் சட்சூ கப்பல் கடலில் அணி வகுத்து சென்றன.

இருநாட்டு கடலோர காவல் படையினரும் இணைந்து கப்பல்களில் இருந்து கடலில் கலக்கும் எண்ணெய் கசிவுகளை அகற்றுதல், கப்பல்களுக்கிடையே ஹெலிகாப்டர் மூலம் தகவல் தொடர்புகளை கையாளுதல், நவீன ரக துப்பாக்கிகளை கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவது, ஹெலிகாப்டரில் இருந்து கப்பலில் குதிப்பது போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதே போல், கடல் கொள்ளையர்களை விரட்டி பிடிப்பது, கப்பல் களை வேகமாக இயக்குவது என பல பயிற்சிகளை செய்தனர். இறுதியாக, ரோந்து கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வந்தன. அந்த கப்பலில் இருந்த வீரர்கள், தாங்கள் அணிந்திருந்த தொப்பிகளை கழற்றி மரியாதை செய்தனர்.

இந்திய கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் அட்மிரல் எம்.பி. முரளிதரன், ஜப்பான் கடலோர காவல் படை கமாண் டன்ட் ஹிஸாயா-சூ-சூசுகி ஆகியோர் கூறுகையில், ‘‘இந்த கூட்டுப்பயிற்சியினால், இருநாட்டு நல்லுறவு வலிமை பெறும். பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏற்றார்போல், தட்பவெப்ப நிலை சாதகமாக அமைந் தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதன் மூலம், இருநாட்டு வீரர்களும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம். இருநாட்டு கடலோரகாவல் படையினரும் தொடர்ந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment