Sunday, January 29, 2012

முறை வைத்து மீன் பிடிக்கலாம் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனைக்கு தமிழக மீனவர்கள் வரவேற்பு!

Sunday, January 29, 2012
மண்டபம்::இந்திய, இலங்கை மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் என முறை வைத்து மீன் பிடிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்த யோசனையை தமிழக மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆழ்கடலில்தான் அதிகம் மீன்கள் கிடைக்கும். இதனால் தமிழக மீனவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கிறார்கள். அதுபோல் இலங்கை மீனவர்களும் வருவதால் மோதல் நடக்கிறது. இதை தவிர்க்க, வாரத்தில் 3 நாட்கள் இந்திய மீனவர்களும், அடுத்த 3 நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்துக்கொள்ளலாம். ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் ஓய்வு எடுக்கலாம் அல்லது அந்த நாளில் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி எங்கு வேண்டுமானாலும் மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை தமிழக மீனவர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்த கருத்து வருமாறு:
ராமேஸ்வரம் மீனவ சங்கத்தலைவர் தேவதாஸ் கூறுகையில், இலங்கை சென்று வந்த அப்துல்கலாம் கூறிய கருத்து, அனைத்து மீனவர்களும் ஏற்க கூடிய கருத்தாகும். இருநாட்டு மீனவர்களும் சகோதரத்துவ முறையில் மீன்பிடித்தால் மீனவர்கள் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும் என்றார்.

தமிழக கடலோர சங்க மாவட்ட செயலாளர் ஜேசு கூறுகையில், அப்துல் காலம் கூறிய கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது. அவர் குடியரசு தலைவராக இருந்தபோதே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தால் இருநாட்டு மீனவர்களும் அமைதியுடன் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார்.மீனவன் மீனவ சங்க தலைவர் எமரிட் கூறுகையில், அப்துல்கலாம் கூறிய கருத்தை வரவேற்கிறோம். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிப்பது போல, 3 தினங்கள் மட்டும் விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க வேண்டும் என்றார். பாம்பன் விசைப்படகு மீனவ சங்க தலைவர் சிப்பிசேசு கூறுகையில், அப்துல்கலாம் கூறிய கருத்தை வரவேற்கிறோம். இருநாட்டு மீனவர்களும் இரு எல்லையிலும் 3 தினங்கள் மீன்பிடிக்கலாம். மத்திய,
மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி இந்த திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment