Sunday, January 29, 2012

கள்ள நோட்டு பாய்ச்சல்... முளையிலேயே கிள்ளி எறிந்தால்... பெரும் ஆபத்து தடுக்கப்படலாம்!

Sunday, January 29, 2012
சென்னை::சென்னை, புதுவை, டெல்லி என்று கடந்த சில நாட்களாக 1000, 500 கள்ள நோட்டு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும், சென்னை, புதுவையில் தான் கள்ளநோட்டு பிரச்னை ஒரு பயங்கரவாத பிரச்னை போல உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்.ஐ.,க்கள், 22 போலீசார் கொண்ட படையாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் கள்ள நோட்டுக்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக 30 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் பிடிபடும் கள்ள நோட்டுக்களில் 99 சதவீதம் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐயால் அச்சடிக்கப்பட்டவைதான்.
2010ம் ஆண்டு இதேபோல சென்னையில் ஒரு கும்பலை சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். அவர்கள் மூலம் வங்கிக் கணக்கை பார்த்தபோது, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த லால் அகமது என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்று தெரிந்து கைது செய்தனர். ஜாமீனில் வெளியில் வந்தவன், அதன்பின் தலைமறைவாகிவிட்டான்.இப்போது தமிழகம், புதுவையில் பிடிபடும் ஆசாமிகள் அனைவரிடமும் விசாரித்ததில், அவர்களுக்கு அவன்தான் தலைவன் என்பது தெரியவந்துள்ளது. அவனுக்கு பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐயுடன் நேரடி தொடர்பு உள்ளது. தீவிரவாதிகள் குறிப்பிட்ட நேரத்தில், நமது எல்லை அருகே ராணுவ வீரர்கள் நடமாட்டம் இல்லாதபோது சாக்கு மூட்டையில் நோட்டுகளை தூக்கிப் போடுவார்கள். அதை எடுத்து வந்து இவர்கள், புழக்கத்தில் விட்டு வருவது தெரியவந்தது.
ஆனால் சிபிசிஐடி போலீசாரால் இதுவரை கண்டு பிடிக்க முடிந்ததே ஒழிய, எல்லைவரை சென்று முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. அதற்கு மத்திய அரசின் உதவி தேவை. அதனால் எல்லைவரை சென்று குற்றவாளியை கைது செய்வதோடு நிறுத்திவிட்டனர். இப்போது ஜாமீனில் வெளியில் வந்த லால் அகமது மீண்டும் தனது கைவரிசையை காட்டி வருகிறான்.
தமிழக போலீசார் பிடித்தவுடன் வழக்கை விரைந்து முடித்து, தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால், தமிழகத்துக்குள் மீண்டும் கள்ள நோட்டு புழக்கம் வந்திருக்காது. அல்லது வேறு மாநில போலீசார் அவனை கைது செய்திருந்தாலோ, அவன் ஜாமீனில் வெளியில் வந்து தப்பியிருக்க முடியாது. தப்பியதால் நாடு முழுவதும் அவன் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகிறான்.
இது குறித்து சிபிசிஐடி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ அமைப்பும் தீவிரவாதிகளும், குண்டு வெடிப்பு சம்பவங்களை
நிகழ்த்துவதோடு, பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகின்றனர். அதற்காக நமது நாட்டில் புதிதாக அச்சடிக்கப்படும் நோட்டு எண்களின் வரிசையை வைத்து, அதேபோல, அந்த நாட்டின் அரசு அச்சகத்திலேயே நமது நோட்டுக்களைப்போலவே அச்சடிக்கின்றனர்.
நாங்கள்தான் முக்கிய குற்றவாளியை கைது செய்தோம். ஆனால் ஜாமீனில் வெளியில் வந்து விட்டார். இப்போது அவரை தேடி வருகிறோம். மேற்கு வங்கத்தில் கூலி வேலை செய்கிறவர்கள் எளிதாக
அவர்களது வலையில் சிக்கி விடுகின்றனர். அவர்களுக்கு முறையான வேலை இல்லை. இதனால் இந்த கும்பலிடம் சிக்குகின்றனர். நாங்கள் பிடித்தாலும், அவர்களை கும்பல் தலைவன், கண்டு கொள்வதில்லை. இவர்களை ஜாமீனில் எடுக்க வந்தால் நாங்கள் பிடித்து விடுவோம் என்ற பயம்தான். இவ்வாறு அவர் கூறினார். மொத்தத்தில் கள்ளநோட்டு விவகாரம், தமிழக போலீசுக்கு விடப்பட்ட சவால். இதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் இந்த அபாய பரவல்
இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

No comments:

Post a Comment