Sunday, January 29, 2012

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம்: அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முரண்பாடு!

Sunday, January 29, 2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சர்வதேசத்தின் மத்தியஸ்த்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மத்தியஸ்த்தம் என்ற கருத்து தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல எனவும் அது சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அரசு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரைக்குமாறு இரா.சம்பந்தனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் எதிர்காலத்தில் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை தொடர வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ரஜிவ் விஜேசிங்க கூறினார்.

இதேவேளை, சர்வதேச மத்தியஸ்த்தம் என்பது தனது சொந்தக் கருத்து அல்ல எனவும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரவாற்றில், இலங்கை - இந்திய ஒப்பந்தம், சமாதான உடன்படிக்கை உள்ளிட்ட பலவற்றிற்கு சர்வதேசம் மத்தியஸ்த்தம் வகித்துள்ளதாகவும் அது போல இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தையிலும் சர்வதேச மத்தியஸ்த்தம் இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் வகிக்க அரசு ஒத்துழைத்தால் அதற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு அல்ல என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் வகித்தால் பேச்சுவார்த்தை முறிவடையாது சுமூகமான நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அமெரிக்க பிரதித் துணைச் செயலாளர் அலிஷா அய்ராசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு, பொதுநலவாய பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், சார்க் அமைப்பு போன்ற ஏதேனும் ஓன்றின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment