Sunday, January 1, 2012

ஹசாரே உடல்நலம் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அட்மிட்!

Sunday, January, 01,2012
புனே:சமூக சேவகர் அன்னா ஹசாரே, கடுமையான மார்பு சளி மற்றும் இருமல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமூக சேவகர் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கடந்த 27ம் தேதி, மும்பையில் 3 நாள் உண்ணாவிரதம் தொடங்கினார். 74 வயதான ஹசாரேவுக்கு வைரஸ் காய்ச்சலால் உடல்நிலை மோசமானதையடுத்து, டாக்டர்கள் அறிவுரையின்படி மறுநாள் உண்ணாவிரதத்தை நிறுத்தினார். சிறை நிரப்பும் போராட்டத்தையும் வாபஸ் பெற்றார். பின்னர் மும்பையில் இருந்து, அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான ராலேகான் சித்திக்கு திரும்பினார். அங்கு அவருக்கு தொடர்ந்து நோய் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்தது. முதுகு வலியும் இருந்தது.

இந்நிலையில், ஹசாரேவை நேற்று பரிசோதித்த டாக்டர்கள், ‘அன்னாவுக்கு கடுமையான மார்பு சளி மற்றும் இருமல் இருக்கிறது. இது நிமோனியா காய்ச்சலாக மாறுவதற்கு முன்பு அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதையடுத்து நேற்றிரவு புனேயில் உள்ள சஞ்சேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. வரும் வியாழக்கிழமை வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஹசாரே உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்த வாரம் நடைபெற இருந்த உயர்மட்ட குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment