Monday, January 30, 2012

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார சவால்களுக்கு தீர்வு-அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

Monday, January 30, 2012
இலங்கை::முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டாலும் அவர்கள் எதிர்நோக்கும் பொரு ளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சமூகரீதியான சவால்கள் குறித்துத் தொடர்ந்தும் அவதானித்து அதற் கான தீர்வுகளை வழங்கத் தயாராகவிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச் சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப் படாதிருப்பதற்கு அவர்களுக்கான வாழ்க்கைத்தர உதவிகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 4 வீத வட்டிக்கு இலகு கடன்களாக வழங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சுமார் 500 பேரை நேற்றைய தினம் சந்தித்திக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர,

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் சிறப்பான முறையில் இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இதற்கு உதவும் வகையில் கைதடியில் நாம் புனர்வாழ்வு தொழில்பயிற்சி நிலையொன்றை நிர்மாணித்துள்ளோம். இத்தொழிற்பயிற்சி நிலையமானது சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும், புனர்வாழ்வுகள் அதிகாரசபைக்கும் இடையிலான தொடர்பாடல் மத்திய நிலையமாகவும் செயற்படும்.

புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அவர்களை நாம் கைவிடப்போவதில்லை என்றார். இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களையும் அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டனர்.

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் காணப்பட்ட சிறைச்சாலைக்கான பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் யாழ். பண்ணை பகுதியில் புதிய சிறைச்சாலைக்கான அடிக்கல்லை நேற்று அமைச்சர் நாட்டி வைத்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 1600 பேர் நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தண்டப் பணம் செலுத்த முடியாததினால் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளும் இதில் உள்ளடங்குவர் எனத் தெரிவித்தார்.

சகல விதமான வசதிகளையும் கொண்ட நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாக புதிய சிறைச்சாலை அமைக்கப்படவிரு ப்பதாகவும், இதற்கு 531 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment