Monday, January 30, 2012

கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானது என்பது பொய் பிரசாரம்: மின் பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியமானது- மத்திய நிபுணர் குழு தலைவர்!

Monday, January 30, 2012
நாகர்கோவில்::கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிபுணர் குழுவினர், மாநில குழுவுடன் நாளை (31-ந் தேதி) நெல்லையில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வுள்ளனர்.

இதையொட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முத்துநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் அவர்கள் நேற்று மாலை கன்னியா குமரியில் ஆலோசனை நடத்தினர். கூட்ட முடிவில் மத்திய நிபுணர் குழுவின் தலைவர் முத்துநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணு உலை தொடர்பான மக்களின் பயத்தை போக்க மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் 8, 18 மற்றும் டிசம்பர் 15-ந் தேதிகளில் நாங்கள் அனைத்து அம்சங்களையும் தீவிரமாக ஆராய்ந்து போராட்ட குழுவினருக்கு பதில் தந்து விட்டோம்.

நாளை நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறோம். அப்போது போராட்ட குழுவினருடன் என்ன பேச வேண்டும்? என்பது குறித்து விவாதிப்போம். அணு உலையும், அணுகுண்டும் ஒன்றல்ல. அணு உலை வெடித்தால் அணுகுண்டு வெடிப்பது போல் ஆகி விடும் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள் போல இங்கு நடக்க வாய்ப்பே இல்லை. கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பானது. நாட்டில் 6 அணு உலைகள் 40 ஆண்டுகளாக செயல்படுகின்றன. அங்கு இதுவரை எவ்வித ஆபத்துக்களும் நிகழவில்லை.

கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்பது பொய் பிரசாரம். இந்தியா வல்லரசு நாடாக வேண்டுமென்றால் தொழில் வளர்ச்சி வேண்டும். எனவே தான் ஆழ்ந்து யோசித்து அணு உலை அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று. மக்கள் நலனை போல நாட்டு நலனும் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மின் பற்றாக்குறையை போக்க இந்த அணு உலை மிகவும் தேவையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நிபுணர் குழுவினர் இன்று 2-வது நாளாக கன்னியாகுமரியில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment