Saturday, January 28, 2012

முகப்பேரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு!

Saturday, January 28, 2012
பூந்தமல்லி::முகப்பேரில் மாயமான 4 வயது சிறுமி இன்று அதிகாலை மீட்கப்பட்டாள். சிறுமியை கடத்தி சென்ற போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர், கிழக்கு புகழேந்தி சாலையை சேர்ந்தவர் கந்தன்(28). பெயின்டர். இவரது மனைவி சந்தியா. இவர்களுடைய மகள்கள் மோனிஷா (6), பவதாரணி(4). நேற்று மாலை பவதாரணி, வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பென்சில் வாங்க சென்றாள். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பவதாரணியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கந்தன், ஜெஜெ நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், மர்ம நபர் ஒருவர் பவதாரணியை கடத்திச் சென்றது தெரியவந்தது. கடத்தப்பட்ட சிறுமியை மீட்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை ஓட்டேரி, அண்ணா நகர், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதியில் போலீசார் 4 குழுவாக பிரிந்து சிறுமியை தேடினர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கந்தன் வீட்டின் அருகில் உள்ள சாலையில் பவதாரணியை அழைத¢துக்கொண்டு வாலிபர் ஒருவர் நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த நபரை தடுத்தனர். அப்போது சிறுமியை விட்டு விட்டு தப்பியோட முயன்றவரை மக்கள் மடக்கி பிடித்தனர். சிறுமியை எங்கு அழைத்து செல்கிறாய் என கேட்டனர். போதையில் இருந்த அவரால் சரியாக பதில் கூற முடியவில்லை. ஆத்திரம் அடைந்த மக்கள், வாலிபரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து பவதாரணியின் பெற்றோர் வந்து அவளை அழைத்து சென்றனர்.

ஜெஜெ நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும் பிளம்பர் வேலை செய்து வருவதாகவும் கூறினார். போதைக்கு அடிமையானாதால் வீட்டை விட்டு உறவினர்கள் துரத்தி விட்டது தெரியவந்தது. முகப்பேரில் உள்ள எனது அக்கா கோமதி வீட்டுக்கு வந்தேன். குழந்தையை நான் கடத்தவில்லை என கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்..

குழந்தையை கடத்தியவனை தூக்கில் போட வேண்டும்: தாய் ஆவேசம்!

சென்னை::முகப்பேரில் கடத்தல்காரனிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் சந்தியா கூறியதாவது:-

என் குழந்தைகள் இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுச் சென்று இருந்தோம். நேற்று மாலையில் பென்சில் வாங்க பவதாரிணி தெருவில் உள்ள கடைக்கு சென்றார். வீடு திரும்பவில்லை என்று எனக்கு தகவல் சொன்னார்கள். பதட்டத்துடன் வீடு திரும்பினேன். இரவு முழுவதும் குழந்தையை தேடினோம். தூக்கமின்றி தவித்தேன்.

இன்று காலை 6.30 மணி அளவில் எங்கள் தெருமுனையில் பவதாரிணியை ஒருவன் ஆட்டோவின் இருந்து இறக்கி விட்டு தப்ப முயன்றான். அதைப் பார்த்ததும் டீக்கடை வைத்திருக்கும் மணிகண்டன் மற்றும் தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் விரட்டிச் சென்று அவனை பிடித்தனர்.

அந்தப்பாவி இரவு முழுவதும் என் குழந்தையை எங்கு வைத்து இருந்தானோ, உடல் முழுவதும் சித்ரவதைப்படுத்திய காயங்கள் இருக்கிறது. அதை நினைக்கையில் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது. தூக்கில் போட வேண்டும். எந்த குழந்தைக்கும் இந்த கதி ஏற்படக்கூடாது.

இவ்வாறு ஆவேசத்துடன் கூறினார்.

கடத்தல்காரனை பிடித்த பெண்கள் பிரியா, சுமதி ஆகியோர் கூறியதாவது:-

குழந்தை பவதாரிணி எங்களிடம் நன்றாக சிரித்து விளையாடுவாள். அவள் கடத்தப்பட்டதை கேள்விப்பட்டதும் துடித்துப் போனோம். தெருவில் யாரும் இரவு முழுவதும் தூங்கவில்லை. குழந்தை எங்கிருப்பாளோ? என்ன ஆனாளோ? என்று பதட்டத்துடன் இருந்தோம்.

இன்று காலை தெருமுனையில் கடத்தல்காரன் ஆட்டோவில் வந்து குழந்தையை இறக்கி விட்டு தப்பி ஓட முயன்றதை பார்த்து விட்டோம். உடனே விரட்டிச் சென்று பக்கத்து தெருவில் டீக்கடைக்கார தம்பியுடன் சேர்ந்து பிடித்தோம். சிறுமியை அவன் சித்ரவதை செய்து இருக்கிறான். இவன்களை எல்லாம் சும்மா விடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் அப்பகுதி பெண்கள் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்தனர். குழந்தை பத்திரமாக திரும்பி வந்ததால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

No comments:

Post a Comment