Thursday, December 1, 2011

கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது என்பதை இந்திய மத்திய அரசு உறுதியாக அறிவித்துள்ள போது அதுவிடயத்தில் புதிய பிரச்சினைகளை கிளப்ப வேண்டிய அவசியமில்லை-பீரிஸ்

Thursday, December 01, 2011
கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது என்பதை இந்திய மத்திய அரசு உறுதியாக அறிவித்துள்ள போது அது விடயத்தில் புதிய பிரச்சினைகளை கிளப்ப வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1974, 76 ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் இந்தியா மேற்கொண்ட உடன்படிக்கைகளின் படி கச்சதீவு இலங்கையின் கடற்பரப்பிற்குள் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த உரிமைப் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அரசியல் வாதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதும் அதற்கு நாம் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ‘மத்திய அரசின் நிலைப்பாடே முக்கியமானது.

அதேவேளை, 2011 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இந்திய லோக் சபாவில் வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ண முன்வைத்த அறிக்கையில் இது தொடர்பான உறுதியான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை - இந்திய அரசாங்கங்களைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கிடையான கடற்பரப்பு எல்லைப் பிரச்சினை மற்றும் கச்சதீவு மீதான இறைமை முடிவுறுத்தப்பட்ட விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது; கச்சதீவு தொடர்பில் இந்தியா உரிமை கோரும் விதத்தில் இந்திய அரசியல் வாதிகள், குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றோர் பல்வேறு வகையான கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர். இது தொடர்பில் இந்திய வெளி நாட்டமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என வினவினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்:

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டோ அல்லது ஒப்பளிப்புச் செய்யப்படவோ இல்லை. எனவே இந்தியா கச்சதீவின் மேலான கோரிக்கையைக் கைவிட்டது என்பதான கேள்வி எழவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 1974 ஆம் ஆண்டில் சரித்திரம் வாய்ந்த பாக்கு விரிகுடா மற்றும் பாக்கு நீரிணையின் நீர் சம்பந்தமாக கடல் எல்லை உடன்படிக்கை சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது: 1665 ஆம் ஆண்டு தொடக்கம் டச்ஈஸ்ற் இந்தியா கம்பனி மற்றும் அதன் பின்னர் பிரித்தானிய கொலோனியல் அரசிற்கு உரித்தானதான சரித்திர ஆவணங்களின் ஆதார அடிப்படையில் இலங்கை கச்சதீவின் மேலான இறைமையுரிமையைக் கோரியது.

இத்தீவு சம்பந்தமான உத்தியோகபூர்வ கடிதத் தொடர்பு வரைபடங்கள் மற்றும் இலங்கையினால் (விலீylon) மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடப்படலாதலான சட்டவாக்கம் என்பனவற்றின் மூலம் தொடர்ச்சியான நிர்வாக ஆதிக்கத்தை இலங்கை கொண்டிருந்ததென்பதாகவும் நிரூபிக்க முடிந்தது.

இதன் பிரகாரம், 1974 ஆம் ஆண்டின் உடன்படிக்கையானது இத்தீவினது இலங்கையின் இறையுரிமையை சம்பிரதாயமாக உறுதிப்படுத்தியது.

மிக அண்மையில் அதாவது 2011 ஓகஸ்ட் 26 ஆம் திகதி லோக சபையின் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்ட அறிக்கையில் இது சம்பந்தமான இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment