Thursday, December 1, 2011

அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு; பாராளுமன்றத்தில் 8-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி; சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Thursday, December 01, 2011
புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தையும் முடக்கி வருகிறார்கள். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. முதல் 4 நாட்கள் விலைவாசி உயர்வு, கறுப்பு பணம் விவகாரத்தில் அமளி ஏற்பட்டது. அடுத்து அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 தினங்களாக அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று 8-வது நாளாக முடங்கியது.

அன்னிய முதலீடு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு வலியுறுத்தினார்கள். இடது சாரிகளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதே பிரச்சினையை வலியுறுத்தினர்.

தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேச உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதே போல கேரள உறுப்பினர்களும் சபையின் மையபகுதிக்கு வந்து முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்பினர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சபா நாயகர் கேள்வி நேரத்தை தொடங்கினார். எதிர்க்கட்சியினரின் தொடர் கோஷம் அமளியால் சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

பின்னர் சபை கூடியதும் தொடர்ந்து அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லிமேல் சபை கூடியதும் எதிர்க்கட்சியினர் ஒட்டு மொத்தமாக எழுந்து அன்னிய முதலீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் உறுப்பினர் சதீஷ் சந்திரமிஸ்ரா வலியுறுத்தினார். கேரள எம்.பி.க்கள் முல்லை பெரியாறு பிரச்சினையை கிளப்பின. தொடர் அமளியால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment