Saturday, October 1, 2011

பல்கட்சி ஜனநாயக அரசியலை ஜே.வி.பி ஆதரித்தது – விக்கிலீக்ஸ்!

Saturday, October 01, 2011
நாட்டில் பல்கட்சி ஜனநாயக அரசியல் கலாச்சாரமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. விரும்பியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸிற்கும், ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட ஓர் சோசலிச கட்சியாக ஜே.வி.பி இயங்கி வருவதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சகலரினதும் பல்மொழி மற்றும் பல் கலாச்சார உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்பிய காரணத்தினால் சரத் பொன்சேகா ஓரம் கட்டப்பட்டதாக சோமவன்ச அமரசிங்க, அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றச் செயல் விசாரணைகளை விடவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றின் அவசியம் முதன்மையானது என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல யுத்தங்களின் போதும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசியவாத கொள்கைகளை விடவும், பல்கட்சி அரசியல் நடவடிக்கைகளின் அவசியத்தையே அதிகம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் இதனால் தாம் அவருக்கு ஆதரவளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment