Saturday, October 1, 2011

ஜேவிபியின் இரட்டை முகம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது!

Saturday, October 01, 2011
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜேவிபி சந்திக்கின்ற மிக நெருக்கடியான காலகட்டம் இது. முன்னரும் ஜேவிபி பல நெருக்கடியான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது தான் என்றாலும் அவற்றிற்கும் இப்போதுள்ள நெருக்கடிக்கும் இடையே பிரதானமான வேறுபாடு ஒன்று உள்ளது.

முன்னைய சந்தர்ப்பங்களின் போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டது அதற்கு வெளியிலிருந்து தான். குறிப்பாக 1971 கிளர்ச்சியின் போதும், 1988 -1989 காலகட்டத்தின் போதும் அது நெருக்கடியை வெளியிலிருந்து எதிர்கொண்டது. அவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தனது உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஆயிரக்கணக்கில் இழக்க நேர்ந்த போதும் சரி, ஏன் அதன் ஏன் தலைவரையும் இழந்த போதும் சரி அது இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டதில்லை.

ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க உள்ளே சென்ற ஜேவிபி வெளியே வரும் போது தன்னுடைய பிரச்சாரப் பீரங்கியை - விமல் வீரவன்சவை - அங்கு விட்டுவிட்டு வர நேர்ந்த போதும் கூட அது தள்ளாடியதில்லை தளர்ந்ததில்லை.

ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி அதன் உள்ளேயே உருவாகியிருக்கிற நெருக்கடி, அதனை நிலை குலையச் செய்திருக்கிறது. அது இவ்வளவு காலமும் செய்து வந்த அரசியலுக்கு உள்ளேயிருந்தே வலுவான எதிர்ப்புத் தோன்றியிருப்பதால் நிலைமை மோசமானதாக ஆகி விட்டிருக்கிறது.

குறிப்பாக சந்திரிகா மற்றும் மகிந்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தமை. அதில் பங்கு கொண்டமை, இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமை, தமிழ்ப்பிரச்சினையைக் கையாண்ட விதம் என்பனவற்றில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. அந்த முரண்பாடுகள் கட்சி உடையுமளவுக்கு நிலைமைகளை இட்டுச் சென்றிருக்கிறது.

இவ்வாறான ஒரு நிலைமையில் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் தகவல்கள் ஜேவிபியை பொதுத் தளத்திலும் அம்பலத்தில் நிறுத்தி விட்டிருக்கிறது.

உலகின் பல்வேறு சோசலிச முகாம் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் கொடி பிடிக்கும் ஜேவிபியின் தலைவர் இலங்கையின் அமெரிக்கத் தூதுவருடன் உரையாடிய தகவற் குறிப்புக்களை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறது...

ஜனாதிபதி ராஜபக்ச ஒரு தூரதிருஷ்டி அற்றவர் எனவும், குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்றும், தாழ்வுச் சிக்கல் உடையவரென்றும் அவர் பாரம்பரியமாக அதிகாரம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் அதனால் அவர் எல்லோரையுமே சந்தேகத்துடனேயே அணுகுவார் என்றும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போது ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரதுங்க தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment