Friday, August 19, 2011

அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் எந்தத் தரப்பும் காலக்கெடு விதிக்க முடியாது-உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு!

Friday, August 19, 2011
அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் எந்தத் தரப்பினரும் காலக்கெடு விதிக்க முடியாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது அரசாங்கமோ அறிக்கையை சமர்பிப்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சில சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாகவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என வலியுறுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment