Thursday, August 18, 2011

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது-கோத்தாபய ராஜபக்ச!

Thursday, August 18, 2011
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், இலங்கையில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.

1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய இலங்கை பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கை படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் இலங்கை அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே இலங்கை அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment