Monday, August 29, 2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்க பரிசீலனை!

Monday, August 29, 2011
வேலூர் : ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் இன்று அப்பீல் செய்யப்படுவதால், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தள்ளிவைக்க சிறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் விசாரணை நடத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து, அவர்களின் தண்டனையை நிறைவேற்றும்படி, வேலூர் சிறை அதிகாரிக்கு அது தொடர்பான கடிதம் சமீபத்தில் வந்தது.

இதையடுத்து, அவர்களுக்கு தண்டனை வரும் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று சிறை அதிகாரிகள் அறிவித்தனர். அதற்கான ஏற்பாடுகளும் சிறையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறை அனுபவித்து விட்ட இவர்களை தூக்கிலிடக் கூடாது; விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டம்: ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து, பல ஆயிரக்கணக்கானோர், தந்திகளும் அனுப்பி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து, கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை உட்பட பெரிய நகரங்களில் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளும் மாநிலம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாள் நெருங்க நெருங்க பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்த மூன்று பேரின் குடும்பத்தினர், உறவினர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோர்ட்டிலும் இன்று அப்பீல் செய்யப்பட உள்ளது. இதனால், தூக்கு தண்டனையை தள்ளி வைக்கலாமா என்று வேலூர் சிறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதுபோன்ற அப்பீல் செய்யப்படும் போது, தூக்கு தண்டனையை தள்ளி வைப்பதற்கு சட்டத்தில் வழி இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அப்பீல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ராஜிவ் காந்தி நேற்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் சார்பிலும் தனித்தனியே திங்கட்கிழமை (இன்று) அபிடவிட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரலாம்.

3 பேரையும் தனிமைச் சிறையில் தனித்தனியாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். சிறை விதிகளுக்கு அப்பாற்பட்டு, உளவுத்துறை, ஐ.பி. அதிகாரிகள் சிறைக்குள் வந்து, விசாரணை என்ற பெயரில் கெடுபிடி செய்கிறார்கள். இயற்கை உபாதையை கழிக்கக்கூட மறைவிடம் கிடையாது. அப்போதும் காவலர்கள் அருகேயே இருப்பதால் 3 பேரையும் மனரீதியாக பாதிக்கும்.

இந்த துன்புறுத்தல் குறித்து 3 பேர் சார்பிலும் சிறைத்துறை ஏடிஜிபி டோக்ராவுக்கு பேரறிவாளன் 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே சுனில் பத்ரா வழக்கில் தனிமைச்சிறையில் அடைக்கக்கூடாது என்று கூறியுள்ளது. அதன்படி 3 பேரையும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment