Friday, August 19, 2011

தமிழக மீனவர்கள் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர்-கோத்தபாய ராஜபக்ச!

Friday, August 19, 2011
வடக்கு மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர்.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஹிந்து போன்ற ஊடகங்கள் தமக்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றன.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வளவு விளக்கம் அளித்த போதிலும் சில சக்திகள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நன்மதிப்பை கூட்டும் நோக்கில் நேர்காணல் எடுப்பதாகத் தெரிவித்த ஊடகவியலாளர்கள் கடுமையான விமர்சனப் பாங்கில் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளுடனான யுத்தத்தில் யுத்த குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு யுத்த குற்ற விசாரணைக்கு மேற்கத்தைய நாடுகள் அழுத்தம் வழங்குவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசினை வெளியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ வீரர்கள் ஆசியாவிலேயே நெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை 2009 நிறைவுக்கு கொணர்ந்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்தும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

இதேவேளை, ஐ.நா நிபுணர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நம்பத்தகு ஆதாரங்களென ஆதாரங்களை வெளியிட்டமையை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஒருசில அமைப்புகளின் ஆசைகளை நிறைவேற்றாத தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசை மாற்றமடைய செய்ய அவ்வாறான அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் மறைமுக நிகழ்ச்சி நிரல் திட்டங்களே இந்த குற்றச்சாட்டுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் யுத்தத்தின் போது இறந்தனர் எனவும் ஆனால் பத்தாயிரக் கணக்கில் பொதுமக்கள் இறந்தனர் என்பதில் உண்மை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான சவால்கள் என்ற தலைப்பில் கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment