Thursday, August 18, 2011

சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த ஜவுளி வியாபாரி ஒருவரிடம் எட்டு இந்தியன், மலேசியன் பாஸ்போர்ட்கள் பறிமுதல்!

Thursday, August 18, 2011
சென்னை : சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த, ஜவுளி வியாபாரி ஒருவரிடம், எட்டு இந்தியன், மலேசியன் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் பெறப்பட்டுள்ள இந்த பாஸ்போர்ட்கள், பயங்கரவாதிகளின் பயன்பாட்டிற்காக கடத்திச் செல்லப்பட்டனவா என்பது குறித்து "கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் அக்பர் அலி ,40. ஜவுளி வியாபாரியான இவர், தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், கொழும்பு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அவரது உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப்பட்டன. அப்போது, ஒரு சிறிய பார்சல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, பல்வேறு பெயர், முகவரிகளில், சமீபத்தில் புதிதாக எடுக்கப்பட்ட இந்தியன் பாஸ்போர்ட் 5ம், மலேசியன் பாஸ்போர்ட் 3ம் இருந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது குறித்து, உடனடியாகக் குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அக்பர் அலியிடம் பாஸ்போர்ட்கள் குறித்து, நடத்திய விசாரணையில்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது, ஒருவர் இந்த பார்சலை கொடுத்ததாகவும், கொழும்பு விமான நிலையத்தில் ஒருவர் வந்து அதை பெற்றுக் கொண்டு, 8ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பார் என்று கூறியதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பார்சலை வாங்கிக் கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து, அக்பர் அலி, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுவரை பயன்படுத்தாத, புத்தம் புதிய பாஸ்போர்ட்டுகள் கடத்தப்பட இருந்தது குறித்து, "கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத கும்பல், இந்த பாஸ்போர்ட் கடத்தல் பின்னணியில் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment