Monday, August 29, 2011

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார்–பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்!

Monday, August 29, 2011
தேசிய அராசங்கமொன்றை அமைப்பதற்கு தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று தசாப்த காலமாக யுத்தம் இடம்பெற்று வந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அரசாங்கமொன்று அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

தேசிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் இதுவரையில் அராசங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.

எனினும், பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பிலான கருத்துக்களை முன்வைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment