Thursday, July 21, 2011

கண்ணிவெடி அகற்றும் பணிக்காக நான்கு ட்ரக் வண்டிகள் இலங்கை இராணுவத்தினருக்கு அமெரிக்க தூதுவர் பெட்றீசியா புட்டேனிஸினால் நேற்று கையளிப்பு!

Thursday, July 21, 2011
கண்ணிவெடி அகற்றும் பணிக்காக நான்கு ட்ரக் வண்டிகள் இலங்கை இராணுவத்தினருக்கு அமெரிக்க தூதுவர் பெட்றீசியா புட்டேனிஸினால் நேற்று கையளிக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர்,

'கடந்த ஆண்டு அமெரிக்க அரசாங்கம் ஐந்து அம்புலன்ஸ்களையும், நான்கு கெப் வண்டிகளையும் இலங்கை கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு வழங்கியிருப்பதோடு, 2009ஆம் ஆண்டு வரை பயிற்சிகள், உபகரணங்ளுக்கு என 10 மில்லியன் வரை வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்த இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அமெரிக்க அரசு 80 மில்லியன் வரை நன்கொடை வழங்கியுள்ளது. கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பாக நாம் முழு ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்குவோம்.

சாந்தி, சமாதானம் நிறைந்த இலங்கையை உருவாக்க அமெரிக்க அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவி புரியும்"எனக் குறிப்பிட்டார்.

இராணுவ பேச்சாளர் உபய மெதவல உரையாற்றுகையில்,

இந்நிகழ்வில் கலந்து கொண்டமையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தினதும் அந்நாட்டு மக்களினதும் ஒத்துழைப்போடு வழங்கப்பட்டுள்ள இந்த நன்கொடையை நாம் ஏற்றுக் கொள்வதோடு, இலங்கை இராணுவத்தினரின் சார்பிலும், இராணுவத் தளபதி சார்பிலும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அமெரிக்க அரசாங்கம், 2003ஆம் ஆண்டு முதல் எமக்கு பயிற்சிகள் மூலமும், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

141 அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மடு தேவாலய சூழல் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை நாம் முற்றாக நீக்கியிருந்தோம்.

அமெரிக்க அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பின் மூலம் தற்போது 1411 அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பின் மூலம் 3971 சதுர கி.மீ பரப்பில் 358,088 கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்துள்ளோம். இது ஒரு பாரிய தொகையாகும்.

தற்போது நாம் மிகவும் கடினமான பிரதேசத்திற்குச் செல்லவிருக்கின்றோம். உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினால் அது ஒரு பாரிய விடயமாக அமையாது என எண்ணுகிறேன்.

கண்ணிவெடி அகற்றும் பணியை விரைவில் நிறைவு செய்து மக்களை மீள்குடியமர்த்த துரித நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதி அளிக்;கிறேன" என்றார்.

No comments:

Post a Comment