Thursday, July 21, 2011

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் வகுப்பு நேரத்தை மாற்றியதால் என்ஜினீயரிங் மாணவர்கள் பஸ்களை உடைத்து ரகளை: வகுப்பறை சூறை-பதட்டம்!

Thursday, July 21, 2011
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

கல்லூரி நேரம் காலை 8.40 மணி முதல் மாலை 3.20 வரை இருந்தது. இதனை கல்லூரி நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றி அமைத்து மாலை 4 மணி வரை நீட்டித்தது. இதற்கு மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறித்த நேரத்தில் வீட்டிற்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். கல்லூரி நிர்வாகத்திற்கு அவர்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்பறைக்கு செல்லாமல் கல்லூரி வாசல் முன்பு திரண்டனர்.வகுப்பு நேரத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

அப்போது மாணவர்களை ஏற்றி வந்த கல்லூரி பஸ்சை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மாணவர்கள் அனைவரையும் இறங்குமாறு கூறி விட்டு பஸ்சை கல்வீசி தாக்கினர். பஸ்சின் அனைத்து கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தது. மொத்தம் 5 கல்லூரி பஸ்களை அடித்து நொறுக்கினர்.சில மாணவர்கள் கல்லூரியின் உள்ளே சென்று வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.

இதனால் கல்லூரியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் பூந்தமல்லி, மாங்காடு, நசரத் பேட்டை, குன்றத்தூர் பகுதிகளில் இருந்து 100-க்கும் மேறபட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சு வார்ததை நடத்தி அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிடையே மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

போராட்டம் குறித்து மாணவர் ஒருவர் கூறும் போது, கல்லூரி நேரத்தை மாலை 3.20-ல் இருந்து 4 மணிக்கு நீட்டிப்பு செய்துள்ளதால் நாங்கள் வீட்டிற்கு திரும்பி செல்லவே இரவு ஆகி விடுகிறது.இதனால் பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்படுகின்றன.

கல்லூரி விடுதியிலும் போதுமான வசதி இல்லை. கேண்டீனில் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் கட்டணம் மட்டும் அதிக அளவில் வசூல் செய்கின்றனர். இவை அனைத்தையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கல்லூரி நேரத்தை மாற்றி பழையபடி கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment