Monday, March 6, 2017

முன்னாள் புலிகளினால் நாட்டுக்கு ஆபத்து: விநாயகமூர்த்தி முரளிதரன்!

வடக்கு கிழக்கில் இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவினையும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்தால் நன்று. மேலும் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறித்த மாகாணங்களில் அதிகளவு கடமையில் ஈடுபடுத்தினால் நன்று.இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
 
வடக்கு கிழக்கிற்கு பாதுகாப்பு காணப்படுகின்றது. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினரையும் புலனாய்வுப் பிரிவினரையும் அதிகரிப்பது பொருத்தமானதாக அமையும்.இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களே வடக்கு கிழக்கில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையில் அமர்த்தப்பட்ட புலனாய்வுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துவதே பொருத்தமாக அமையும்.ஏனெனில் அவர்களுக்கு வடக்கு கிழக்கின் அனைத்து மூலை முடுக்குகளும் நன்றாகத் தெரியும்.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 14000  முன்னாள் புலிபோராளிகள்   வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
 
முன்னாள் புலிகள் என்ன செய்கின்றார்கள் என்பதனை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
அவ்வாறு இல்லையென்றால் மீளவும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு அழிவினை ஏற்படுத்தக்கூடும்.
முன்னாள் புலி போராளிகளுக்கு வெளிநாட்டு தொடர்பு உண்டு. இந்த விடயங்கள் குறித்து நான் ஏற்கன அமைச்சர்களிடமும் கூறியுள்ளேன்.
 
 புலிபயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நாட்டில் மீளவும் வன்முறை வெடிக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என கருணா தெரிவித்துள்ளார்.

வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண பொலிஸ் தேவையில்லை : பாட்டலி சம்பிக்க ரணவக்க!


வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண பொலிஸ் தேவையில்லை என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஹோமாகம, குடுமாதுவ பிரதேசத்தில், இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஆவா குழு எனும் பாதாள உலகக்கோஷ்டி உருவானது. புலி உறுப்பினர்கள் இருவர், ரி-56 ரக துப்பாக்கிகளுடன் மட்டக்களப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவற்றிலிருந்து, சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கும் காலம், மீண்டும் தலைதூக்கிவி ட்டது என்பது புலனாகின்றது.

அவ்வாறான சக்திகளுக்கு பின்னால், அரசியல் பலம் இருக்குமாயின், அவற்றை தோற்கடிப்பதற்கு நீதிமன்றம், பொலிஸ் மற்றும் சமூகம் ஆகியன ஒன்றிணையவேண்டும். பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் அனுசரனையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தில் என்ன இருக்கின்றது.
 
இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது. சகல மாநிலங்களிலும் பயங்கரவாதம் தலைத்தூக்கிக்கொண்டிருக்கின்றது. அந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமைக்கு பிரதான காரணம், மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியமையாகும். ஆகையால், அந்தநாட்டில் சட்டம் மற்றும் சமாதானம் சீர்குலையும் நிலைமைக்கு சென்றுவிட்டது.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுத்தால், சமயங் குழு, ஆவா குழு என்று இன்னும் பல பாதாள உலகக் கோஷ்டி உருவாகிவிடும். பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதனால் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது. எனினும், தமிழ்மொழி பேசுகின்றனவர்களின் கலாசாரத்தை கண்டறிந்து, அவ்வாறானவர்களையும் பொலிஸில் இணைந்துகொள்வதன் ஊடாக, இவ்வாறானப் பிரச்சினையை வெற்றிக்கொள்ளமுடியும். இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர், தமிழ்மொழி பேசுக்கிற நிறையபேர் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதற்கு, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கவேண்டிய தேவையில்லை. பிரச்சினையை தேசிய பொலிஸினால் மட்டுமே தீர்த்துவைக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும் எந்தப் பதவியையும் வகிக்கப் போவதில்லை : முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச!

எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும், எந்தப் பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பின் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் பங்கேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
 புத்திஜீவிகள் அரச நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்றாலும், அரசியல்வாதியாக வேண்டிய அவசியமில்லை. நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல புத்திஜீவிகளை இணைத்துக் கொண்டு திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
 
எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றாலும் பதவி எதனையும் ஏற்கப் போவதில்லை. எனினும் மக்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டிய அவசியமுண்டு. நாம் எப்போதும் மக்களுடன் இணைந்திருப்போம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Sunday, March 5, 2017

நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்!

நாகப்பட்டினம், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்; இலங்கை கடற்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவுகிறது.

நாகையைச் சேர்ந்த மீனவர்கள், எட்டு பேர், கடந்த 1ம் தேதி, மீன் பிடிப்பதற்காக கடலுக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே, 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தங்களை தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், இந்திய கடலில் தங்களை சுதந்திரமாக தொழில் செய்ய விடுமாறு, இலங்கை கடற்படையினரிடம் தெரிவித்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தோஷ், 30, என்ற மீனவர், படகில் இருந்த பாட்டிலை உடைத்து, தன்னை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆவேசமடைந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்துச் சென்றனர்.

உயிருக்கு போராடிய மீனவரை, திரிகோணமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சக மீனவர்கள், ஏழு பேரையும், அந்நாட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கடந்த, மூன்று நாட்களில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு படகுகளை பறிமுதல் செய்து, 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது, மீனவர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை !

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1901ல் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 215 தனிநபர், 103 சமூக அமைப்புகள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ்
, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இரண்டாவது முறையாக 300க்கு மேற்பட்டோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 376 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
நோபல் கமிட்டி, வரும் அக்., 6ல் விருதுக்கு தேர்வான நபரின் பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, March 4, 2017

பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது : ரொசான் செனவிரட்ன!

கேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது என்று முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படுவதைப் போன்று அங்குள்ள இராணுவ முகாம்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன -
அன்று இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது இதே பதிலைத்தான் வழங்கியிருந்தேன். இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட
மாட்டாது. இங்கு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள். இப்பிரதேச மக்களின் காணிகள் இன்று கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” - என்றார்.