Friday, January 20, 2017

புலிகளின் முன்னாள் உறுப்பினரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது!

புலிகள் அமைப்பின் வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த எமில்காந்தனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.
 
சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திறைசேரியால் ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவினை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் 2ஆம் பிரதிவாதியான எமில்காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, 2006 ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி வரையான காலத்தில் கிளிநொச்சி அரசுக்கு சொந்தமான 200 மில்லியன் ரூபாவினை கொழும்பில் மோசடி செய்தமை, அதற்காக உதவி செய்தல், உள்ளிட்ட 7 குற்றங்களுக்காக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்கு தொடரப்பட்டது.
 
மேலும் கடந்த வழக்கின் போது ஆஜராகாத எமில்காந்தனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதாக நேற்று மன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் களு ஆராச்சி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறவுள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசன்த தெரிவித்தார்.
 
மேலும் 1 தொடக்கம் 6 வரையான சாட்சிகளை ஏதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளான டிரான் அலஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தனர்.
 
ஜெயலங்க வீடமைப்பு திட்டத்தால் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் 800 வீடுகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, January 19, 2017

திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்த விவேக்!

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு நடிகை திரிஷா, ஆதரவு தெரிவித்ததாக கூறி, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
இதையடுத்து கமல்ஹாசன், திரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் விவேக்கும் திரிஷாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில், த்ரிஷா தன்நிலை தெளிவு படுத்திவிட்டார். ஏறுதழுவலும் நடந்து விட்டது. ஜல்லிக்கட்டு, பாரம்பரியம், பெண்மை போற்றுதல் நம் பண்பாடு. கண்ணியம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Wednesday, January 18, 2017

சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது!

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் கூட்டு எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
 
பாராளுமன்றத்தில் 51 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை கொண்டுள்ள கூட்டு எதிர்கட்சிக்கு குறித்த இரண்டு பதவிகளும் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கட்சிக்கு மொத்தமாக 22 உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். எவ்வாறாயினும் அவர்களை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தமது தரப்பு கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் விரும்புவோரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து, தமது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி அமைப்பாளர்களையும் தாம் விரும்பியவாறு அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டவர்களே எதிர்கட்சி தலைவர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து நூல் எழுதும் பணிகளில் விமல் வீரவன்ச ஈடுபட்டு வருகின்றார்.
 
கிடைத்துள்ள ஓய்வில் தாம் நூல் எழுதி வருவதாகவும் இதுவரையில் 24 பக்கங்கள் எழுதி முடித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து விடுதலையானதும் தாம் இந்த நூலை அச்சிட்டு வெளியிட தீர்மானித்துள்ளதாக வீரவன்ச கூறியுள்ளார்.

ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படாது: இராணுவப் பேச்சாளர்!

ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி முற்றாக அகற்றப்படாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்குப் பகுதியில் உள்ள காணிகளை மாத்திரமே இராணுவத்தினர் கையளிப்பர். நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பர். காணிகளை விடுவிக்கும் இந்த முடிவு சடுதியாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல.
 
தனியார் காணிகளை விட்டு வெளியேறும் நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற ஒன்று தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.