Wednesday, January 18, 2017

சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது!

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் கூட்டு எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
 
பாராளுமன்றத்தில் 51 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை கொண்டுள்ள கூட்டு எதிர்கட்சிக்கு குறித்த இரண்டு பதவிகளும் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கட்சிக்கு மொத்தமாக 22 உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். எவ்வாறாயினும் அவர்களை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தமது தரப்பு கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் விரும்புவோரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து, தமது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி அமைப்பாளர்களையும் தாம் விரும்பியவாறு அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டவர்களே எதிர்கட்சி தலைவர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment