Tuesday, April 29, 2014

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு தடை கோரிய மனு தள்ளுபடி கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

Tuesday, April 29, 2014
பெங்களூர்::ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி 2 கம்பெனிகள் தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுதமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ பாரம், நெக்ஸ்ட் பிரபார்ட்டி ஆகிய 2 கம்பெனிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஏற்கனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியாயின. அதை எதிர்த்து கம்பெனிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று, நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கம்பெனிகள் சார்பில் வக்கீல் ஜெய்குமார் பாட்டீல் வாதாடினார். அவர் கூறியதாவது:வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு இந்த கம்பெனிகளில் எந்த நேரடி தொடர்பும் கிடையாது. எங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
 
அதுபோல் ஜெயலலிதாவும், சசிகலாவும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே தவிர நேரடி பங்குதாரர்களாக இல்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எங்கள் கம்பெனிகளின் சொத்துக்களை ஜெயலலிதாவின் சொத்துகளாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, வழக்கில் இருந்து எங்கள் கம்பெனிகளை விடுவிக்க வேண்டும். எங்கள் மனு மீதான விசாரணை முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு வக்கீல் பவானிசிங் ஆஜராகி, ‘வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடாது’ என்றார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏற்கத்தக்கதல்ல’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

7வது கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் சோனியா, மோடி தொகுதிகளில் நாளை வாக்குபதிவு தொண்டர்கள் வீடு, வீடாக ஓட்டுவேட்டை !

Tuesday, April 29, 2014
புதுடெல்லி::நாடாளுமன்ற தேர்தலில் 7வது கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வதோதரா, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தொண்டர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டையாடி  வருகின்றனர்.    மக்களவையில் மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி  முதல் கட்ட தேர்தல் நடந்தது. 6வது கட்டமாக, தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 117 மக்களவை தொகுதிகளில் கடந்த 24ம் தேதி தேர்தல்  நடந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 7வது கட்டமாக நாளை 7 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடக்கிறது. ஆந்திராவில் 17தொகுதிகள், குஜராத்தில் 26,  பஞ்சாபில் 13, உத்தரபிரதேசத்தில் 14, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 7, காஷ்மீரில் 1 ஆகிய 7 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நாகர் ஹவேலி,  டாமன் மற்றும் டையூ ஆகிய தொகுதிகளில் தலா 1 தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடக்கிறது. ஆந்திராவில் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை  தொகுதிகளுடன், 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் மொத்தம் 1295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 222 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்.  அவர்களில் 139 பேர் கடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வேட்பாளர்களில் 341 பேர் கோடீஸ்வரர்கள்.  மோடி,  சோனியா: குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி, குஜராத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதரா  தொகுதியிலும் வாக்குபதிவு நடக்கிறது. அதே போல், உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

இந்த 2 தொகுதிகளிலும் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். மேலும், இத்தொகுதிகளில் மத்திய படையினர் மற்றும் உள்ளூர்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா(ஸ்ரீநகர் தொகுதி), பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்(லக்னோ),   அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் அருண் ஜெட்லி(அமிர்தசரஸ்), முரளி மனோகர் ஜோஷி(கான்பூர்),  உமா பாரதி(ஜான்சி) ஆகியோர் போட்டியிடும்  தொகுதிகளிலும் நாளை வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு  வாக்குபதிவு தொடங்குகிறது.

விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது: வசந்த பண்டார!

Tuesday, April 29, 2014
இலங்கை::
வட மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் அது நாட்டின் பிரிவினைவாதத்திற்கே உந்துசக்தியாக அமையும். எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்  தெரிவித்தது.

இதுதொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்இ இன்று நேற்றல்ல. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார என்றுமே இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போனவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது மைத்துனர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி வகிப்பதால் வடமாகாண சபைக்கு அனைத்து அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அதனை மறுப்பது தவறென்றும் சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் சிக்கியிருப்பதாகவும் அமைச்சர் விமர்சிப்பதாக தெரிவித்தார்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நாட்டு மக்கள் மத்தியில் விருப்பம் கிடையாது. இதனை மீறி செயற்பட முடியாது. அத்தோடு அதிகாரங்களை வழங்கினால் அது பிரிவினையை நோக்கியே முன்னகர்த்தப்படும். இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். நாம் அடிப்படைவாதிகள் அல்ல. தேசத்தை நேசிப்பவர்கள் என்பதை அமைச்சர் வாசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு   இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதால் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமல்லாது புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமளிப்பதாக அமையும். அரச உயர்மட்டம் இது தொடர்பில் கவனம்  செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது: புலிகளின் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்

Tuesday, April 29, 2014
இலங்கை::எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் வைத்தே அவர் நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

யுத்தக்காலத்தின் போது வடமாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு பதிலாக இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் வரை காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் கந்தசாமி கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி குற்றவாளியாக இனங்கண்டு கட்சியிலிருந்து நீக்கியமை எனக்கு கவலையளிக்கின்றது என்றார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்பதில் மகழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து வரும் செயற்பாடுகள் பயன்மிகுந்ததாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

வவுனியா வைத்தியசாலையில் தப்பிச் சென்று: பெண் வேடத்தில் மறைந்திருந்த புலிகள் இயக்க சந்தேகநபர் கைது!!

Tuesday, April 29, 2014
இலங்கை::வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாஇ குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்ஷெட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்க புலனாய்வுத் தகவலை அடுத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணியளவில், இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு பஹ்ரேனில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது!

Tuesday, April 29, 2014
இலங்கை::இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பஹ்ரேன் அரசாங்கத்தால் 'க(ப)லிபாஃ அபிதானய' எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரேன் ராச்சியத்தின் ஹமாத் பின் இசா அல் கலிபா மன்னரால் இந்த விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியான தங்களும், உங்களைச் சார்ந்த நட்பு நாடுகளும், இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எலிசபேத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கௌரவ விருதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'தாம் பெருமிதத்தையும், வரபிரசாத்தை எதிர்கொண்ட மகிழ்ச்சியையும் அடைவதாக தெரிவித்தார்.
 
பஹ்ரேன் ராச்சியத்துடன், மிகவும் விரிவான கூட்டுறவை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.