Tuesday, April 29, 2014

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு தடை கோரிய மனு தள்ளுபடி கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

Tuesday, April 29, 2014
பெங்களூர்::ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி 2 கம்பெனிகள் தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுதமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ பாரம், நெக்ஸ்ட் பிரபார்ட்டி ஆகிய 2 கம்பெனிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
 
வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஏற்கனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியாயின. அதை எதிர்த்து கம்பெனிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று, நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கம்பெனிகள் சார்பில் வக்கீல் ஜெய்குமார் பாட்டீல் வாதாடினார். அவர் கூறியதாவது:வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு இந்த கம்பெனிகளில் எந்த நேரடி தொடர்பும் கிடையாது. எங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
 
அதுபோல் ஜெயலலிதாவும், சசிகலாவும் உறுப்பினர்களாக இருக்கிறார்களே தவிர நேரடி பங்குதாரர்களாக இல்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எங்கள் கம்பெனிகளின் சொத்துக்களை ஜெயலலிதாவின் சொத்துகளாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, வழக்கில் இருந்து எங்கள் கம்பெனிகளை விடுவிக்க வேண்டும். எங்கள் மனு மீதான விசாரணை முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு வக்கீல் பவானிசிங் ஆஜராகி, ‘வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடாது’ என்றார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏற்கத்தக்கதல்ல’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment