Wednesday, July 10, 2019

கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!

இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்   இடம்பெற்றது. நேற்று காலை இடம்பெற்ற இக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.வைபவ இடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்கள் வரவேற்றார். இந்த ஆண்டு இடம்பெறும் இம் மாநாட்டில் பல்வேறு உறுப்பு
நாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
 
இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், கடல்சார் ஆள்புலம் மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகள், தற்கால மற்றும் எதிர்கால விவகாரங்களை தீர்மானிக்கும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக மாறியுள்ளன. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியமானது, உலக விவகாரங்களில் ஈர்ப்பு மையமாக வேகமாக மாறி வருவதுடன் அது கடல்சார் பூகோள அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கான மையப் பகுதியாகவும் மாறியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
 
நாட்டின் கேந்திர முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், நாட்டின் நீர்மைய்ய பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் வெற்றி ஆகியன பாதுகாப்பான கடல் வளத்தை சார்ந்தே உள்ளன எனவும் பிராந்தியத்தில் எழும் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்கள், கடல் சார் கூட்டான்மைக்கு வழிகோலியதாவும் குறிப்பிட்டார். கரையோர பாதுகாப்பு தலைமைகளின் இதுபோன்ற செயற்குழு கூட்டங்கள், கடல் சார் நாடுகளிடையே ஒரு வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கு அவசியமான ஒரு தளத்தை வழங்குவதில் காத்திரமான பங்கு வகிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இன்றையதினம் ஆரம்பமான கரையோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு கூட்டம் இம்மாதம் பதினோராம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை கடலோர பாதுகாப்பு படை இவ்வகையான பலதரப்பு கூட்டத்தை நடத்துவது இதுவே முதல் தடவை ஆகும் என கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கரையோர பாதுகாப்பு தலைமைகளின் அமையம் ஆனது, 2004 ஆம் ஆண்டில் ஜப்பானின் முன்முயற்சிகளால் உருவான ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல்சார் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க உயர் மட்ட பன்முக கூட்டமாகும். இவ்வமையம் தற்போது, 22 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
 
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), கடற்படையின் பிரதம அதிகாரி மற்றும் இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment