Monday, June 24, 2019

19 ஆம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்ய காலம் போதாது: மஹிந்த ராஜபக்ஷ!

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்வதற்கான கால அவகாசம் போதுமானதாக இல்லை என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
ஹங்குரன்கெத்த - மாதம்வெல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பின் 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில் 18 ஆம் திருத்த சட்டம் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் 19 ஆம் திருத்த சட்டம் குறித்த தெளிவினை தற்காலத்திலேனும் பெற்றுக்கொண்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டில் அடுத்த தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கு 4 மாதக்காலமே எஞ்சியுள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில்; 3 இல் 2 பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும்.ஆகவே குறித்த கால இடைவெளிக்குள் 3 இல் 2 பெரும்பான்மையை நிருபித்து அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டத்தை நீக்குவது சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment