Thursday, May 9, 2019

பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை , பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன அயராது பணியாற்றி வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் (மே,06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். தற்போது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக ஒரு திட்டமிட்ட பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தவறான தகவல் அல்லது வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என கோரியதுடன், இப்போது இருக்கும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொய்யான அறிக்கைகள் வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
 
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முப்படைகள் மற்றும் போலீசார் எடுத்துள்ளனர். பெற்றோர், பாடசாலை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன்,பாடசாலைகளும் சுமுகமாக செயல்படத் தொடங்கும் என மேலும் தெரிவித்தார்.
 
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முப்படைகள் மற்றும் போலீசார் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் பொது மக்களின் இயல்புவாழ்க்கையை மீள ஏற்படுத்துவதற்காக அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் பொதுமக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை எனவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
 
இலங்கை கடற்படை சகல துறைமுகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதுடன், நாட்டினதும் பாதுகாப்பிற்காகவும் ஏனைய படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் கரையோரப் பகுதிகள் மற்றும் கடல் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளினதும் கூட்டு முயற்சியுடன் நாம் இயல்பான நிலையை மீள கொண்டு வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பிற்குப் பின்னர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட விமானப்படை, விமான நிலையத்தின் பாதுகாப்பினை வலுப்படுத்தியதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருக்கும் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. பயணிகளின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இதனால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விமானப்படை எந்தவிதமான வான் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்கள் தெரிவித்தார். எனவே மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
குண்டுதாக்குதலுக்கு பின்னால் உள்ள சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பலர் தற்கொலை தாக்குதலில் இறந்துவிட்டனர். அந்த குழுவில் உள்ள இரண்டு குண்டுவெடிப்பு நிபுணர்களும் இறந்துவிட்டனர். எதிர்காலத்தில் பயன்டுத்துவதற்காக இந்த குழுவால் மறைக்கப்பட்ட அனைத்து வெடிக்கும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மற்றும் நேரடியாக தொடர்புபட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பதில்கடமையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சி. டி விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. பொலிஸார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப் படைகளுடன் இணைந்து பணிபுரிந்துவருகின்றனர். பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடாத்தப்படுகின்றன. சமூக வலைத்தளங்களின் மூலம் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவலை நம்பவேண்டாம் பொதுமக்களிடமிருந்து கேட்டுக் கொள்ளவதாகவும், அவசியம் ஏற்படும் வேளையில் குறித்த விடயம் தொடர்பாக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக பொருத்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இச்செய்தியாளர் மாநாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment