உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்தக் குண்டுதாரிகளுக்கும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுவோருக்கும் பெருந்தொகை சொத்துக்கள் இருந்ததாக
விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷங்கிரி-லா ஹோட்டல் தாக்குதலில் மொஹமட் காஸிம் மொஹமட் சஹ்ரான் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய மற்றைய நபரின் பெயர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பதாகும். சினமன்ட் கிரேன்ட் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் என கண்டறியப்பட்டுள்ளது. மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் என்பவர் கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவராவார்.
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சென் செபஸ்ரியன் தேவாலயத்தை அச்சு மொஹமட் மொஹமட் ஹஸ்துன் என்பவர் தாக்கியதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரி அலவ்தீன் அஹமட் முவாட் என்பவராவார். மட்டக்களப்பு ஷியோன் தேவாலய தாக்குதலில் மொஹமது நஸார் மொஹமது அசாத் என்பவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதித் தாக்குதலை நடத்தியவர் அப்துல் லத்தீவ் ஜமீல் மொஹமட் என்பவராவார். தெமட்டகொடை இல்லத்தில் குண்டை வெடிக்கவைத்த பெண்ணின் பெயர் பாத்திமா இல்ஹாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தற்கொலைக் குண்டுதாரிகளின் ஏனைய உறவினர்களை இனங்காண்பதற்கு டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment