இலங்கையில் மக்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம்சாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடனடியாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களுக்கான கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மகாநாயக்கத் தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களான மல்வது அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை இன்றைய தினம் நேரில் சந்தித்து மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின்
முக்கியஸ்தரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து அஸ்கிரி, மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்தனர்.
முக்கியஸ்தரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து அஸ்கிரி, மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்தனர்.
இதன்போது 250 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் விமல் வீரவன்சவினால் வெளியிட்டப்பட்டுள்ள புத்தகத்தை கையளித்த வீரவன்ச தற்போதைய ஆபத்தான நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான தலைமைத்துவத்தை அரசியல் தலைமைகளுக்கு வழங்க மகாநாயக்கர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
வாக்குகளை மாத்திரம் இலக்கு வைத்து செய்த அரசியல் காரணமாகவே நாடு இன்று பேரழிவுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் இப்பொழுதாவது அப்படி செயற்படாது மேற்கொள்ள வேண்டிய சரியான தீர்மானங்களை எடுக்காது விட்டால் இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு எமக்கு இனிமேலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப் போவதில்லை. அதனால் மகாநாயக்கத் தேரர்களான நீங்கள் இதற்கு தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். கர்தினால் ஆண்டகையையும் நாம் சந்தித்தோம். அவரும் உங்களுடன் இந்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை
எடுப்பதாக அறிவித்தார்.
மகாநாயக்கத் தேரர்களின் வழிகாட்டல்கள் தற்போதைய நிலையில் அவசியப்படுகின்றது. அப்படியில்லாவிட்டால் இதனை திருத்தவே முடியாது போய்விடும். ஒவ்வொருவரும் தமது நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களின் உணர்வுகளை கொள்ளையடிக்கலாம். இறுதியில் நாட்டுக்குத் தேவையானதைத் தவிர வேறு தேவைகள் பூர்த்திசெய்யப்படும். அப்படி நடக்குமானால் பாரிய அழிவுதான் ஏற்படும்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தையும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கைவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் விமல் வீரவன்ச மகாநாயக்கத் தேரர்களிட் முறையிட்டார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்களை அடுத்தே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய வீரவன்ச, அவ்வாறு நடந்தால் நாடு பேராபத்தை எதிர்நோக்கும் என்றும் எச்சரித்தார்.
இதே முறைப்பாட்டை அஸ்கிரிய மகாநாயக்கர் வரக்காகொட சிறி புத்தரக்கித்த தேரரிடம் விமல் வீரவன்ச முறையிட்ட போது முஸ்லிம்கள் செறிந்துவாழும் சில பகுதிகள் இன்னமும் சோதனைசெய்யப்படவே இல்லை என்று அஸ்கிரிய மகாநாயக்கரும் குறிப்பிட்டார்.இதேவேளை ஈஸ்டர் தாக்குதல்களை காரணம் காட்டி அமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் முயன்றுவருவதாகவும் மகாநாயக்கத் தேரர்களிடம் முறையிட்ட விமல் வீரவன்ச, அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள புதிய ஒப்பந்தங்களும் நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இரண்டு தடவைகள் அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சென்று சந்தித்திருந்த அமெரிக்காவின் கொழும்புக்கான தூதுவர் அலைய்னா பி டெப்ளிஸ், அமெரிக்கா – இலங்கையிடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தம் ஒருபோதும் சிறிலங்காவின் பாதுகாப்பு, ஒருமைப்பா மற்றும், இறையாண்மைக்கு எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அமெரிக்கா ஒருபோதும் எந்தவொரு நாட்டுடனும் ரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளாது என்றும் ஒப்பந்தங்களை செய்யும் போது முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதாகவும் அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்ளிஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment