Friday, May 24, 2019

மக்களவை தேர்தலில் பாஜ மகத்தான வெற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமர்: 301 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை!

மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 301 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம், 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் ஏமாற்றமடைந்தன.நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தின் வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடந்த

எதிர்பார்த்த வெற்றி பெறாமல் ஏமாற்றமடைந்தன.நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தின் வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் எந்த கூட்டணி ஆட்சியை கைப்பற்றப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில், நாடு முழுவதும் ஆரம்பம் முதலே பாஜ வேட்பாளர்கள் முன்னிலை பெறத் தொடங்கினர். தமிழகம், கேரளாவைத் தவிர வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜ வேட்பாளர்கள் முன்னிலை பெறத் துவங்கினர்.

அதே சமயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியே இருந்தன. குறிப்பாக, 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பாரம்பரிய அமேதி தொகுதியிலேயே பின்தங்கியது காங்கிரஸ் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே பாஜவின் முன்னிலை 300ஐ தாண்டியது. ஏற்கனவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்என கணிக்கப்பட்டிருந்தது. பாஜவும் 300 இடங்களை இலக்காக கொண்டு பிரசாரம் செய்தது.அதன்படியே, பாஜவின் மகத்தான வெற்றி அமைந்தது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் பிரமாண்ட வெற்றி பெற்றனர். டெல்லி, இமாச்சல், குஜராத், அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜ அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. பாஜவுக்கு கடும் போட்டியாக கருதப்பட்ட மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மேற்கு வங்கத்திலும் 18 இடங்களை கைப்பற்றியது.  பாஜவின் சுனாமி வெற்றிக்கு முன்பாக, பீகாரில் அமைக்கப்பட்ட ஆர்ஜேடி-காங்கிரஸ் மெகா கூட்டணி எடுபடவில்லை. பீகாரில் 40 தொகுதிகளில் 38ஐ பாஜ கைப்பற்றியது. நாட்டிலேயே அதிக தொகுதிகளை (80) கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜவை வீழ்த்த பரம எதிரிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜூம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணியாலும் பாஜவின் வெற்றியை பெரிய அளவில் தடுக்க முடியவில்லை.

உபியிலும் பாஜ 62 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி 17 தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதைத்தொடர்ந்து, பாஜ 301 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜவின் கூட்டணி கட்சிகளும் வெற்றிகளை குவிக்க, தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. நாடு முழுவதும் வெற்றிகளை குவித்தாலும், தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் பாஜ கட்சியால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களையும், அதில் காங்கிரஸ் 51 இடங்களிலும் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ராகுல் வயநாட்டில் சாதனை வெற்றி பெற்றாலும், அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார்.இதே போல, காங்கிரசின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உட்பட பல நட்சத்திர வேட்பாளர்கள் அதிர்ச்சித் தோல்வியை தழுவினர். கேரளாவில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி 20ல் 19 தொகுதிகளை கைப்பற்றி ஆறுதல் அடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் (மேற்கு வங்கம்), சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (ஆந்திரா), தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவர் சந்திரசேகரராவ் (தெலங்கானா) உள்ளிட்ட தலைவர்களும் அவர்களது மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியவில்லை.

குறிப்பாக, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்க பெரும் முயற்சி மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் நடந்த மக்களவை தேர்தல் மட்டுமின்றி சட்டப்பேரவை தேர்தலிலும் ஏமாற்றமடைந்தார். அவரது தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 29 இடங்களில் மட்டுமே வென்று மாநிலத்தில் ஆட்சியையும் இழந்தது. மாநிலத்தில் ஆட்சியை பிடித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை தேர்தலிலும 25ல் 24 தொகுதிகளை வென்று அசத்தியது. தெலுங்கு தேசத்தால் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது.மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் வேண்டும். கடந்த 2014ல் பாஜ கூட்டணி 342 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 282 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இம்முறை அதை விட சிறப்பான வெற்றியாக 301 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.பிரமாண்ட வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அனைத்து கட்சி தலைவர்களும், உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் 38 தொகுதிகளில் வென்று மகத்தான வெற்றியை பதிவு செய்த திமுக, மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

விவிபேட் ஒப்பீட்டால் அதிகார அறிவிப்பு தாமதம்
 
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்ட நிலையில், விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடுவதற்காக நேற்று இரவு, ஒவ்வொரு தொகுதியிலும் 5 இயந்திரங்களில் இருந்த சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதனால் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.

மக்கள் அளித்த தீர்ப்பு அமித்ஷா கருத்து
 
பாஜ தலைவர் அமித்ஷா கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மற்றும் தனிநபர் தாக்குதலுக்கு மக்கள் அளித்த தீர்ப்புதான் இது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு காரணம், மோடிதான். அவர் ஒரு சூப்பர் ஹீரோ’’ என்றார்.

நேரு, இந்திரா காந்திக்குப்பின் மோடி செய்த அதிரடி சாதனை
 
முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப்பின், மக்களவையில் தனி பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சிக்கு வரும் ஒரே பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜ 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. இந்த தேர்தலில் பா.ஜ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.சுதந்திர இந்தியாவில் கடந்த 1951-52ம் ஆண்டு நடந்த முதல் மக்களவை தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நான்கில் 3 பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்.

அதன்பின் கடந்த 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் 371 இடங்களில் நேரு வெற்றி பெற்றார். கடந்த 1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் இருந்த 494 தொகுதியில், 361 இடங்களில் நேரு வெற்றி பெற்றார். கடந்த 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் நேருவின் மகள் இந்திராகாந்தி மொத்தம் உள்ள 520 இடங்களில் 283 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதுதான் அவரது முதல் வெற்றி. அதன்பின் கடந்த 1971ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 352 இடங்களில் இந்திரா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இவர்களுக்குப்பின் பிரதமர் மோடி மட்டுமே தொடர்ந்து இரு முறை தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி
 
உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அவர் முன்னிலை பெற்றார். இறுதியில் இவர் 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவ், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்றார். இதன் மூலம், 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

மோடி அளித்த 3 வாக்குறுதிகள்
 
மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, நேற்றிரவு டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை ஏராளமான தொண்டர்கள் குவிந்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கட்சியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு 3 உறுதிமொழி அளித்தார். அவர் பேசுகையில், ‘‘இது ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி. கோடிக்கணக்கான மக்கள் இந்த ஏழையின் பையை நிரப்பியிருக்கிறார்கள். எனவே, தவறான உள்நோக்கத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டேன். எதையும் தனிப்பட்ட லாபத்திற்கான செய்ய மாட்டேன். என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஓயாமல் உழைக்கும் என உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.

தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. பாஜவை பிரமாண்ட வெற்றி பெற செய்த பிரதமர் மோடிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடியும் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவும் வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அவர்கள் இருவர் மீதும் மலர்களை தூவி வரவேற்றனர். அப்போது அவர்களின் இதயப்பூர்வமான வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து வெற்றி சின்னத்தை காட்டி உற்சாகமாக கையசைத்தார்.

No comments:

Post a Comment