Wednesday, May 8, 2019

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் இலங்கையில் இதுவரை குண்டு வெடித்த இடங்கள்!

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழு மற்றும் அவர்கள் பயன்படுத்திய இடங்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்புத் தரப்பினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
 
பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலைமை வகித்ததாகக் கூறப்படும் மொஹமட் சஹ்ரானுக்கு பின்னர் தலைவராக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும்நௌஃபர் மௌலவி என்பவர், தாக்குலுக்கு மறுதினம் விசேட குழுவொன்றினால் தம்புள்ளை நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குருநாகலில் இருந்து கத்துருவெல நோக்கி மற்றுமொரு நபருடன் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த அவர், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தம்புள்ளையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார்.
இதன்போது, தம்புள்ளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 73 பேர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பிலுள்ளனர்.
 
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள 54 பேரில் 7 பேர் பெண்களாவர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலுள்ள 19 பேரில், இரண்டு பெண்கள் அடங்குகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதியா மற்றும் அவரின் மகள் ஆகியோர் பொலிஸாரின் பொறுப்பிலுள்ளனர்.
சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என கூறப்படும் மௌலவி ரிலா ஷான்னவாஜ் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சஹ்ரானின் சகோதரியான ஃபாசிம் மதனியா 20 இலட்சம் ரூபா பணத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹ்ரானின் சாரதி என கூறப்படும் கபூர் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய பல குற்றச்செயல்கள் தொடர்பிலான தகவல்களை பாதுகாப்புத்தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இரண்டு ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இன்ஃபாஸ் அகமட் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர், பாதுகாப்புத் தரப்பினரால் பகிரங்கப்படுத்தப்பட்ட நிழற்படங்களில் இருந்த, பாத்திமா லத்தீபா, மொஹமட் இஃப்ஹயிம் ஷாஹிட் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் இஃப்ஹயிம் சாதிக் அப்துல் ஹக் ஆகிய மூவரும் பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ளனர்.
 
மொஹமட் சஹ்ரானை தாக்குதலுக்குத் தூண்டியதாகக் கூறப்படும், மொஹமட் இமாம் பாகிர் என்ற இமாம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சிரியா சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இருந்த ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.
பயங்கரவாத குழுவினர் பயன்படுத்திய பல்வேறு கட்டடங்கள் மற்றும் இடங்கள் தொடர்பிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ரிதிதென்ன, தும்மலசூரிய, கம்பளை, நுவரெலியா, ஒல்லிக்குளம், சாய்ந்தமருது மற்றும் வண்ணாத்திவில்லு ஆகியன அவற்றுள் சில இடங்களாகும்.
ரிதிதென்ன
 
மட்டக்களப்பு – வாழைச்சேனை, ரிதிதென்ன, ஓமடியாமடு பகுதியில் பாதுகாப்பு பிரிவினர் நேற்று சோதனையிட்ட காணியில் இருந்து 231 ஜெலட்னைட் குச்சிகள் மற்றும் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய சில கொள்கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
தும்மலசூரிய
தும்மலசூரிய பிரதேசத்தில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிறுவனம், பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரணைக் குழுவினர் சந்தேகிக்கின்றனர்.
சாய்ந்தமருது
 
அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டை வெடிக்கச்செய்து உயிரிழந்த குழுவில், மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களும் உள்ளதுடன், அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளனர்.
ப்ளக்பூல்
நுவரெலியா – ப்ளக்பூல் பகுதியிலுள்ள வீட்டை பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒல்லிக்குளம்
பயங்கரவாத குழுவினர் பயிற்சி பெற்ற மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மேலும் இரண்டு வீடுகள் காத்தான்குடி – ஒல்லிக்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
கம்பளை
 
கம்பளையிலுள்ள பாதணி வர்த்தக நிலையத்தின் மேல் மாடியில் நடத்திச் செல்லப்பட்ட, பயங்கரவாத பயிற்சியளிக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான, மொஹமட் இஃப்ஹயிம் ஷாஹிட் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் இஃப்ஹயிம் சாதிக் அப்துல் ஹக் ஆகியோர் மறைந்திருந்த இடத்தை சோதனையிட்ட போதே இந்த இடம் கண்டறியப்பட்டது.
வண்ணாத்திவில்லு
கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு, பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட இடமாக இருக்கலாம் என விசாரணைக் குழுவினர் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment