Monday, April 22, 2019

கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் வெளிநாட்டவர்கள் 36 பேர் பலி!

கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் வெளிநாட்டவர்கள் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 11 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 3 பேர், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த 3 பேர், துருக்கி நாட்டவர்கள் இருவர், அமெரிக்கர்கள் இருவர் மற்றும் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அடையாளம் தெரியாத வெளிநாட்டவர்கள் 25 பேரின் சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேலும் 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேலும் 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் றாகமை ஆகிய மருத்துவமனைகளில் எந்த ஒரு வெளிநாட்டவரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தநிலையில், வெளிநாட்டவர்கள் குறித்த தகல்களை பெற்றுக் கொள்வதற்காக 0112 32 30 15 என்ற தொலை பேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியலயம் தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment