Sunday, April 21, 2019

இன்று காலை தொடக்கம் இதுவரை 228 பேர் உயிரிழப்பு? காவற்துறை ஊடக பேச்சாளரின் ஊடக சந்திப்பு!

இன்று காலை தொடக்கம் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்களில் இதுவரை 228 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சில் சற்று முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த 450க்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி , 0112322485 என்ற இலக்கத்துக்கு அழைத்து குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வௌிநாட்டவர்கள் தொடர்பில் விபரங்களை அறிந்துக்கொள்வதற்காக  0112323015 என்ற விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், உயிரிழந்தோரில் 27 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை - கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு - கட்டான - கட்டுவாபிட்டிய தேவாலயம், மற்றும் மட்டக்களப்பு ஸீயோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சினமன் க்ராட் முதலான விருந்தகங்களில் இன்று காலை 8.45 முதல் 9.30 வரையில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

பின்னர், 1.45 அளவில், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு முன்னால் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவானது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை வெடிப்புச் சம்பவங்களுக்கு முன்னதாக 6 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் பலியானவர்களில் 81 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 110 சடலங்கள் நீர்கொழும்பு மருத்துவமனையிலும், 28 சடலங்கள் மட்டக்களப்பு மருத்துமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் மரணித்த 28 பேரில் 14 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ராகம மருத்துவமனையில் 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தெஹிவளையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து, தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

குறித்த வெடிப்புச் சம்பவங்களில் 3 காவல்துறையினர் பலியாகினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதுவரை 7 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment