அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலிமுகத்திடலில் இருந்து
ஆரம்பித்துள்ளதாகவும் அதனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்போவதில்லை என்றும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கம் தற்போது தேசிய வளங்களை விற்றுவருகிறது. ஹம்பாந்தோட்டை
துறைமுகத்துடன் 15,000 ஏக்கரை சீனாவுக்கு வழங்கவும், மாதுறு ஓய
பிரதேசத்தில் காணியைப் பெற்றுக்கொடுக்கவும், திருகோணமலை துறைமுகத்தை
விற்பதற்கும் அனைத்து திட்டங்களும் தயாராகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ
கூறினார்.
மக்களின் ஒரு பகுதியினர் அன்று ஏமாந்ததாலும், மீண்டும் ஏமாற தயாரில்லை
என்றும், தேசிய வளங்களைப் பாதுகாக்க தேசியக் கொள்கையொன்றை ஏற்படுத்தி
உறுதியான தொடர்ச்சியான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில்
தனது அரசாங்கத்தை கவிழ்க்க 660 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதாக தெரிய
வந்துள்ளது. சிலர் அதற்கான பணத்தை மலசலகூடங்களில் வைத்து வழங்கியதாக பிரதேச
சபை உறுப்பினரொருவர் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தன்னுடைய காலத்தில் முப்படைகளையும் உபயோகித்து பயங்கரவாதத்தை ஒழித்து
நாட்டில் அமைதியை ஏற்படுத்தினேன். ஆனால் இந்த அரசாங்கம் கோரிக்கைகளை
வென்றெடுக்கும்பொருட்டு பாதைக்கு வரும் மக்களை அடக்கவே முப்படைகளை
பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
குப்பை மலை சரிவடைந்து வீழ்ந்ததனால் மக்கள் மரணமடைந்த சம்பவம் உலகில்
வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை. துரதிஷ்டவசமாக இந்நாட்டின் இது
நடந்துள்ளது. குப்பையை அகற்ற வழியில்லாத அரசாங்கம் தனக்கு சவால் விடுப்பது
நகைச்சுவையாக உள்ளது. இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் மே தினம். நாட்டை
ஏலமிடும் விரயம்செய்யும் இந்த அரசாங்கத்தின் முடிவை தீர்மானித்து நாட்டை
அழிக்கும் கள்வர்களை விரட்டி புதிய அரசாங்கத்துக்கு வழி அமைக்கும்
மேதினமென்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
விமல், மஹிந்தானந்த, கம்மம்பில, நாமல் போன்றோருக்கும் எதிராக பொய்க்
குற்றச்சாட்டுகள் முன்வைத்து அடக்குமுறையை அரசாங்கம் முன்னெடுத்து
வருகிறது. எமது அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு திறமையானவர்களை துரத்தி
பலவீனமானவர்களை நியமித்து வருகின்றனர்.
2015ல் மக்கள் வாக்களித்து நாட்டை விற்பதற்காகவா? அரசின் மோசடிகளால் கடன்
சுமை உயர்ந்துள்ளது. சு. கவுக்கு வாக்களித்தவர்களை அரசாங்கம்
காட்டிக்கொடுத்துள்ளது. குறைந்த எம்.பிக்கள் உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி
தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.