எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.
காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறியதாவது:-
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்.
இதேபோல் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுமே எல்லையில் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய-பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் எல்லையில் தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கு இதுபோன்ற தொடர்புகள் மிகவும் அவசியம்” என்றார்.
No comments:
Post a Comment