Saturday, September 3, 2016

இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்!

இறுதி கட்ட  போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற பான் கீ மூனிடம், சர்வதேச பங்களிப்பை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துவருகின்றமை குறித்து கேள்வி எழுப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த ஐ.நா செயலர், இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். நிலைமாறு நீதிப்பொறிமுறையில் முழுமையான அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கெடுத்துள்ளன என நான் நினைக்கின்றேன். பங்குபற்றுதல் மட்டத்தில் வேறுபாடுகள் காணப்படலாம். அல்லது முக்கியமான விடயங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வேறுபாடுகள் காணப்படலாம்.
 
ஐக்கிய நாடுகள் சபை மிக முக்கியமான மூன்று விடயங்களை நோக்கி பயணிக்கின்றது.ஒன்று நல்லிணக்கம், அதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அடுத்தது சர்வதேச நிலைமாறுநீதிப்பொறிமுறை, அந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நம்பகமான நிலைமாறு நீதிப்பொறிமுறையை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
நம்பகத்தன்மை என்பது தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமாக அமைய வேண்டும். சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளது. புரிந்துணர்வு குறைபாடு அல்லது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வேறுபாடுகள் காணப்படலாம். எனினும் நாம் சரியான திசையை நோக்கி முன்னோக்கி பயணிக்கின்றோம். நீங்கள் முன்னோக்கி பயணிக்கின்றீர்கள்.
 
பரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மன்னிப்பு வழங்குதல், பொறுமை காத்தல் உள்ளிட்ட இவை அனைத்தையும் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அரசாங்கமும் இந்த தருணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவற்றை நோக்கிய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment