Wednesday, September 9, 2015

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Wednesday, September 09, 2015
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செப்டம்பர்.08) முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.
 
இந்த மாநாட்டை நடாத்தும் உபசரிப்பு நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இம்மாநாட்டுக்கான சகல ஏற்பாட்டுப் பணிகளையும் மேல் மாகாணசபை பொறுப்பேற்று நடாத்தியுள்ளது.
 
இம்மாநாடு நாளைய தினமும் நடைபெறுகின்றது. ஆபிரிக்கா, அமெரிக்க, ஐரோப்பா ஆசியா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 37 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
 
உலகெங்கிலுமுள்ள பிராந்திய அரசாங்கங்களை நிலையான அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வது இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும். அதற்கான அறிவு, இயலுமை மற்றும் அனுபவங்களைப் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையே பகிர்ந்து கொள்வது இம்மாநாட்டினூடாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
மாகாண சபை மட்டத்தில் நிலையான அபிவிருத்தியை மேம்பத்துவதற்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், உயிர்பல்வகைத்தன்மை, நீர்வள முகாமைத்துவம், சுகாதார முறைமைகள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் போன்றவை தொடர்பான அறிவு அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிகழ்வில் காலநிலை மாற்ற தழுவல் செயற்திட்டம் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், மேல்மாகாண ஆளுநர் கே சி லோகேஷ்வரன் அவர்களினால் அச்செயற்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
 
அமைச்சர் சுசில் பிரேமஜயன்த, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண விவசாய சுற்றாடல்துறை அமைச்சர் காமினி திலக்க சிறி உட்பட அரசாங்க அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோ உள்ளிட்டஆதிவாசிகளும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment