Wednesday, September 30, 2015

ஜெனிவா தீர்மானம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோருகிறார்: விமல் வீரவன்ச!

Wednesday, September 30, 2015
ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்பாக பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.  நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டு கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது பொய். உண்மையில், சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலமே சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவுள்ளது. இந்த விசாரணை இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் இது குறித்து, மக்களின் அனுமதியை பெறுவதற்கு பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவது அவசியமென்று அவர் கூறினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ குணவர்த்தன, அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்படுமென்று குற்றம்சாட்டினார். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் அவகாசம் இருக்கின்ற நிலையில், அமெரிக்க தீர்மானத்திற்கு அரசு ஆதரவு தெரிவித்துள்ளது ஏற்கமுடியாததென்று புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

No comments:

Post a Comment