Thursday, September 3, 2015

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் சர்வதேச ஆதரவை இழந்து விட்டது: அமெரிக்காவுக்கான, முன்னாள் பாக்., துாதர், உசேன்!

Thursday, September 03, 2015
வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்னையில், உலக நாடுகளின் ஆதரவை, பாகிஸ்தான் இழந்து விட்டது,'' என, அமெரிக்காவுக்கான, முன்னாள் பாக்., துாதர், உசேன் ஹக்கானி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஹட்சன் மையத்தின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு இயக்குனராக உள்ள உசேன், மையத்தின் வலைதளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:காஷ்மீர், பாகிஸ்தான் மக்களின் உணர்வுபூர்வ பிரச்னை. ஆனால், அதை சரியான வகையில் மக்களிடம் கொண்டு செல்ல, பாக்., தலைவர்கள் தவறி விட்டனர். அதனால், இதுவரை காஷ்மீர் பிரச்னையில் கிடைத்து வந்த சர்வதேச ஆதரவை, இனி பாக்., பெற முடியாது.காஷ்மீர் பிரச்னையை பேச்சு மற்றும் பொது ஓட்டெடுப்பு மூலம் தீர்த்துக் கொள்ள பாக்., விரும்புகிறது.
 
அதே சமயம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, பாக்., கைவிடாத வரை, காஷ்மீர் பிரச்னையை விவாதிக்கக் கூட முடியாது என, இந்தியா மறுத்து வருகிறது.காஷ்மீர் குறித்து, கடைசியாக, 1957ல், ஐ.நா., தேசிய பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள், இன்னும் இதை அறியாமல் உள்ளனர். இன்று, ஐ.நா.,வில், காஷ்மீர் குறித்து தீர்மானம் கொண்டு வர, உலக நாடுகளின் ஆதரவை பெற முடியாத நிலையில், பாக்., உள்ளது.இத்தகைய சூழலை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு பதிலாக, இந்தியாவும், பாகிஸ்தானும், பரஸ்பர வர்த்தகம், எல்லைப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, இரு தரப்பு உறவை மேம்படுத்த முயற்சிக்கலாம்.பாக்., தலைவர்களுக்கு, காஷ்மீர், தாரக மந்திரமாக உள்ளது. அதே நேரத்தில், அப்பிரச்னையை தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கு அறிவர்.
 
ஆனால், இஸ்லாமியர்கள் மற்றும் உள்நாட்டு ராணுவத்தின் ஆதரவுக்காக, அவர்கள், வேஷம் போடுகின்றனர்.மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளோருக்கு, பாக்., அரசு உதவுவதால், இந்தியா எரிச்சல் அடைந்துள்ளது. அதனால், 'பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்' என்று அது கூறுகிறது.அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளுக்கு, 'பாடம் புகட்டுவது' அவ்வளவு சுலபம் அல்ல; வட கொரியாவை ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கும் அமெரிக்காவின் நிலையை, இந்தியர்கள் உணர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment