Saturday, September 12, 2015

குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது அரசாங்கத்தின் ஊடக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Saturday, September 12, 2015
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லை. மாறாக சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளக விசாரணை வெகு விரைவில் நடத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ருவான் விஜயவர்தன பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் தனது கடமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னரே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அதனூடக நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
 
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம் நாட்டில் சமாதானத்தையும் அதேவேளை மக்களை அச்சமின்றிய சூழலில் வாழ விடுவதுமே எமது நீண்டகால திட்டமாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பது எனது பிரதான எதிர்பார்ப்பாகும். அதை நான் மிகச் சரியாக செய்து முடிப்பேன். மிகவும் பொறுப்புமிக்க இந்த பாதுகாப்பு அமைச்சுப் பதவியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்கு நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் இந்த அமைச்சுப்பதவியின் மூலமாக நாட்டுக்கும் மக்களுக்கு நாம் சேவையாற்றுவேன்.
 
இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய எமது இராணுவ வீரகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
இந்த நாட்டில் சமாதானம் ஒன்று உருவாக எமது இராணுவ வீரர்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளனர். இந்தத் தியாகம் மூலமாக ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும்.
 
அத்தோடு இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சில சிறப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பில் நாம் கடந்த காலத்தில் தீர்மானித்திருந்தோம். எனினும் தேர்தல் காலம் நெருங்கியதால் தனிப்பட்ட சலுகைகளை எம்மால் வழங்க முடியாது போய்விட்டது. எனினும் எதிர்வரும் காலத்தில் இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினால் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டு சர்வதேச தரப்பினாலும் தமிழர் தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
 
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது அரசாங்கத்தின் ஊடக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை இராணுவத்தை சர்வதேச ரீதியில் தண்டிக்க தயாராவதாகவும் ஒருசிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எந்த காரணம் கொண்டும் இலங்கை இராணுவத்துக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இலங்கை அரசாங்கம் இடமளிக்காது. மாறாக உள்ளக விசாரணைகளின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். அடுத்த மாதம் அளவில் உள்ளக விசாரணைக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment