Sunday, September 06, 2015
சென்னை:இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணையில்
அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம்
முன்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
முதலில் ஒரு மாணவர்
அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்
வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினரும், திருமாவளவன் தலைமையில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று இளைய
தலைமுறை மாணவர் அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம்
நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்திய வாலிபர் ஒருவர் உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்தனர்.
பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.
அமெரிக்க தூதரகம்
முன்பு இதுவரை 4 முறை போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து போராட்டங்கள்
நடைபெற்று வருவதாக அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க
தூதரகம் முன்பு வழக்கமாக 1 உதவி கமிஷனர், 1 இன்ஸ்பெக்டர் தலைமையில் சுமார்
100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 12 இடங்களில்
ரோந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அமெரிக்க தூதரகம்
முன்பு அண்ணா மேம்பாலத்தின் மேலேயும் போலீசார் பாதுகாப்புக்கு
நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
போராட்டங்கள் நடந்து வருவதால் தற்போது
அமெரிக்க தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம்
நடத்த வரும் அமைப்பினருக்கு ஏற்ப அதிக போலீசாரை பாதுகாப்புக்காக
குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை உதவி கமிஷனர்
கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ஏதாவது அமைப்பினர் அமெரிக்க தூதரகம் முன்பு
போராட்டம் நடத்த வந்தால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு யாரும் அமெரிக்க
தூதரகத்தை நெருங்காத வண்ணம் பாதுகாப்பு அரண் போல நின்று போலீசார்
தடுப்பார்கள்.
No comments:
Post a Comment